Thursday, November 08, 2018

என்னுயிர்




தீரா நதியொன்றின்,
சின்னஞ்சிறு அலை நீ..
அலை போகும் திசையில்
மிதக்கும் இலக்கில்லா படகு நான்...

நீளும் ஒற்றை பாதையில்,
தனியொரு மரமாய் நீ...
உன் நிழலில் இளைப்பாறும்
வழியறியா வழிப்போக்கன் நான்..

நீண்டதொரு  பெருங்கனவின்
சிறு வெளிச்சம் நீ..
வெளிச்சம் தேடும்
விட்டில் பூச்சியாய் நான்..

உன்னோடு நான் செல்லும் தருணமெல்லாம்,
நான் தொலைத்த நிமிடங்கள்...

என் உயிர் தேடி
நான் சென்ற பயணங்கள் எல்லாம்,
உன்னில் முடிந்து
புதிதாய் தொடங்கியதே...

காற்றில் கரையும்
உன் மொழி கூட,
என்னுள் கவிதை செலுத்தி,
காதல் சொன்னதே...

இரவின் நிலவு
சாய்ந்தும் கூட,
உன் கண்ணின் ஒளி,
என்னை சாய்க்கிறதே...

முடிவில்லா என் கனவின்
தொடக்கம் நீ..
என் கனவோடு தோன்றும்
தொடு வானம் நீ...
தொடு வானம்
தூரம் சென்றாலும்,
நான் எட்டி பிடிக்கும்
தூரத்தில் இருக்கும்
நட்சத்திரம் நீ...

புதிதாய் நானும் பிறக்கிறேன்,
ஒவ்வொரு முறையும், உன்
கண் சிமிட்டலில்
என்னை அழைக்கும் போது....
அழகாய் நீயும் சிரிக்கிறாய்,
என் அன்பில் உன்னை
கொல்லும் போது....

பெருங்கனவோடும்,
இந்த கவிதையோடும்,
உன் புன்னகையோடும்,
உன் , என் வாழ்வில்,
நம் வாழ்வை
தொடங்குவோம்...

















முதுமை

வெள்ளை முடிகளோ ,
சுருங்கிய தோல்களோ,
வளைந்த எலும்புகளோ ,
ஒளி குறைந்த கண்களோ ,
உன் முதுமையின் வலியை
தீர்மானிக்க போவதில்லை ..

மனைவியை இழந்த ,
வயதான கணவனின் வலி ....
ஆளாக்கிய பிள்ளையை இழந்த,
வயதான தாயின் வலி ....
பிள்ளைகளின் நிராகரிப்பில் ,
ஊமையாகி போன
பெற்றோரின் வலி...
அடுத்தடுத்து சக நண்பர்களின்
மரணங்களை,
வேடிக்கை மட்டும் பார்க்கும் முதுமையின் வலி...

இந்த வலிகள் தீராது போயினும் ,
வந்து சேர வேண்டிய மரணம்
வராது போயினும் ,
நீ வாழும் முதுமை கொடியதே !!!

பிரிவு



காரணம் இன்றி எவ்வுறவும் பிரிவதில்லை..

மரணம் தவிர்த்து,
நாமும் பிரிய போவதில்லை..

கங்கை வற்றினாலும்,
உயிர்கள் பிழைக்க கூடும்..

மங்கை நீ இல்லாது போனால்,
நான் வற்றி காணாது போவேன்..

நீரோடும் நதியோ,
தேரோடும் வீதியோ,
உன் பாதங்கள் படாது போனால்,
நீருமின்றி, தேருமின்றி
கலை இழந்து போகும்..

விலையின்றி எதுவுமில்லை என்பார்கள்...
நீயின்றி எதுவுமில்லை என்பேன் நான்...
மறுப்பு சொல் ஏதும் வந்தால்,
நீ என்பது நீதான் என்று எடுத்துரைப்பேன். 

நீ என்பதும் நீதான் ,
நான் என்பதும் நீதான்.
கனவும் நீதான்,
அதை மெய்ப்பட செய்பவளும் நீதான்..
அழகும் நீதான்,
அன்பும் நீதான்...
என் கண்ணீரும் நீதான்..
அதை துடைப்பவளும் நீதான்..

என்றும் நீ தான்..
உன்னை தொலைத்தால்,
தொலைபவனும் நான் தான்...

நான்

நான் என்பது இந்த உடலா...
உணர்வும் அறிவும் கலந்த மனமா...

உடலின் முதுமை,
மனதின் முதுமை..
எதை உன்னால் தடுக்க முடியும்..

எதை தடுத்தாலும் ,
இறப்பை உன்னால் தடுக்க முடியுமா..

காலம் இறவாது....
நீ இறப்பாய்...
உன் உடல் துர்நாற்றமடிக்கும் பிண்டமாகும்..
உன் மனம் இருளில் தொலைந்த நிழலாகும்...
காலம் உன்னை மறக்கடிக்க செய்யும்..
அடையாளமற்று போவாய்..

உன் அன்பின் வரலாறோ..
அல்லது வெறுப்பின் வரலாறோ...
எதுவும் காலத்தின் முன் கரைந்து போகும்...

இந்த நீண்ட நெடிய வாழ்க்கையின் பயணம் ,
இன்பத்திற்கானதா?
துன்பத்திற்கானதா?
இந்த பயணம் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்..

ஆனால் பயணத்தின் முடிவில்,
அர்த்தமற்ற முற்றுப்புள்ளியில்
மறைந்து போகிறாய்...

வாழ்க்கையே ஓர் அர்த்தமற்ற துன்பம்,
நாம் சந்திக்கும் மனிதர்களிடத்திலாவது
அன்பை தர முயற்சிப்போம்..

பிரிவு



நீரில் தெரியாது போன உன் கண்ணீர்,
என் மனதில் வழிந்தோடுவது ஏன்?

உன் நினைவில் தேயாத துன்பம்,
என்னை உருக்குவது ஏன்?

உன் கண்களின் சோகம் ,
என் இதயத்தில் தங்குவது ஏன்?

உன் கனவுகளை விரட்டும் வெளிச்சம்,
என்னை ஏன் சுடுகின்றன?

உன் மனதின் காயங்கள்,
எனக்கு ஏன் தீரா வலியை
தருகின்றன?

நீ தொடரும் மௌனங்கள்,
என் காதில் பேரிரைச்சலாய் மாறுவது ஏன்?

என் மனதின் வெறுமையெல்லாம்,
உன் கலைந்து போன கனவுகளே..

ஒளியின் தீக்கதிர் என்னை வாட்டினாலும்,
என் நிழல் உன் மீது என்றும் விழும்..

வேர்களே விலகி போனாலும்,
உன்னை நான் வீழாது தாங்குவேன்..

பேராற்றங்கரையில், என் விரல்களை தழுவி செல்லும்
நீரலை நீ..

நீ வற்றினால், என் உயிர் வாடும்,
நீ என்னை அனைத்தால்,
என் உயிர் வாழும்..


என்றும் தீரா நட்புடன்,
நான் 

பிரிவென்பது யாதெனில் !



எல்லாருக்கும் வணக்கம்.
எல்லாருக்கும்னா "எல்லாருக்கும்" தான் (நண்பன் 1,நண்பன் 2, நண்பன் 3, நண்பன் 4,....).

இன்றைய பிறந்தநாளுடன் , ஏதோ ஒன்று முழுமையடைந்து சற்றே ஓய்வெடுக்க போகிறது. அந்த ஏதோ ஒன்று, நம்மிடையே , நாமே உணராமல் அனுபவித்த நட்பின் சுகமான மகிழ்ச்சி தருணங்கள் !
இது தற்காலிக ஓய்வாக இருக்கலாம். ஆனால் , நிரந்தர ஓய்வாக இருக்க முடியாது என்று நம்புகிறேன்..

மகிழ்ச்சியான தருணங்களை , நினைவுகளாக்கி , நண்பன் 1 சற்றே விலகி செல்ல போகிறான்..

இன்று நண்பன் 1...
நாளை வேறு ஒருவர் திருமணமாகி பிரியலாம்,
மற்றொருவர் நண்பன் 1 போல வேலை கிடைத்து பிரியலாம்..

எல்லோரும் இங்கே பிரிந்து செல்லவே நட்புடன் வாழ்கிறோம்..

எல்லோரும் பிரியலாம்...
காலங்கள் கடக்கலாம்..
சிலரின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படலாம்..
நம் நட்பை இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வைத்து ,
நண்பர்களை மறந்து வாழலாம்...
தோல்கள் சுருங்கி ,
கண்ணின் ஒளி மங்கி ,
இருளில் ஒளிந்து வாழும் அந்த நாளில்...
நினைவுகள் மீண்டும் அசை போடும்..
நட்பு உயிர்த்து எழும்..
நண்பர்களை தேடும்..
சிலர் முன்னதாக  இறந்திருக்கலாம்..
சிலர் நம்மை போல சுருங்கிய தோல்களுடன்
உனக்காக காத்திருக்கலாம்...

அப்படி ஒரு தருணத்தில் ,
உனக்கு முன்னதாக நான் இறந்திருந்தால் ,
என் பிள்ளைகளிடம் நம் நட்பின்
கதையை சொல்லியிருப்பேன்.
நீ வந்து கேட்டு  தெரிந்து கொள்..

நீ எனக்கு முன்னதாக இறந்திருந்தால்,
மௌனமாய் உன்னை திட்டிவிட்டு ,
எனக்கான இறுதி நாளை
உன் நினைவுகளோடு எதிர்பார்ப்பேன்.

நாம் உயிரோடு சந்தித்து கொண்டால்,
அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
மீண்டும் புதியதாய் கதை பேசி,
திட்டி கொண்டு,
கோபித்து கொண்டு,
சண்டையும், அன்புமாய்
மீண்டும் நட்பு கொள்வோம்.


தேடல்


உன்னை தேடி ,
கடலில் மூழ்கி ,
கரையின்றி நீந்தி ,
உண்னை காணாது ,
அழுது சோகம் வளர்த்து ,
பின்னொரு நாளில் ,
மூழ்கியது உன் நட்பின் கடலில் என
புரிந்து கொண்டேன் !
புரிந்த அடுத்த தருணத்தில் ,
கரையாய் உன் கைகளை ,
பற்றி கொண்டேன் !

தவறுகள்

சின்னஞ்சிறு தவறுகள் !..
கெஞ்சி கெஞ்சி நான் ,
மன்னிப்பு கேட்கிறேன்!.....
நீ சிணுங்கி சிணுங்கி
மறுக்கிறாய் !...
உன் மொத்த அழகும்
சிணுங்கல்கள் தான் !
அதனால் தான் ,
மீணடும் மீணடும்
தவறு செய்கிறேன் !

காதல்

உன் விழி இனி, எனை தேடும்!
மலர் கரம் , எனை தீண்டும்!
இசை மொழி, காதல் சொல்லும்!
காதல் தீண்டி, மனம் உருகும் !
உருகி உருகி , உயிர் வாடும்!
அவள் துன்பம், இனி எனதாகும்!

கொஞ்சம் சிரித்தாய்!
கொஞ்சி கொஞ்சி சிரித்தாய்!
நான் சிறிது இறந்தேன்!
சிறிது சிறிதாய் இறந்தேன்!
கடந்து செல்ல தூரம்
இல்லா பாதை வேண்டும்!
பாதை தூரம் எனில் , கை பிடித்து
நடக்க நீ வேண்டும் !
மொழிகள் ஏதுமின்றி சுற்றி திரிவேன்,
உன் நினைவுகள் தொலைந்துவிட்டால்!

என் தமிழை பேச வைத்தாய்!
கவிதை என சொல்லி
ஏதோ கிறுக்க வைத்தாய்!
விழியில் ஆரம்பித்து புன்னகையில் முடிவது காதல்!
இதோ இந்த கவிதையையும்,
உன் இதழ் ஒர புன்னகையில்
முடித்து வைக்கிறேன் !

புன்னகையின் மரணம்!


அன்பில் தோன்றிய நட்பை அறிந்த இவ்வுலகம்,
அன்றொரு நாள் புன்னகையில் தோன்றிய நட்பை அறிந்தது!
ஒரு தலை நட்பு , ஈருடல் கொண்டது!
ஈருடலில் ஓருடல் குழந்தை போன்ற அந்த உள்ளத்தை ,
வான் மழையின் சாரல் என கொண்டாடியது!
தீரா புன்னகை இது என மனம் கூத்தாடியது!
கொஞ்சம் கோபம் , நிறைய மன்னிப்பு,
கொஞ்சம் சந்தோசம் , நிறைய அக்கறை என
தூரங்கள் கடந்தன! - பின்பு
கொஞ்சம் சிரிப்பு, நிறைய வெறுப்பு என
காலங்கள் மாறின!
உண்மை நட்பு இதுவென அறியாமல்,
மனம் வீழ்ந்தது!
வீழ்ந்த மனம் , கைகளை தூக்கி
மழையின் சாரலை நோக்கி நீட்டியது!
சாரலோ குத்தீட்டீகளாய் குத்தியது!
இது ஒரு தலை நட்புதான் என
உள்ளம் கடைசியாய் ஒருமுறை புன்னகைத்தது!
அதன் பின்பு, நட்பை தாங்கிய அந்த புன்னகை
மெல்ல மெல்ல நட்பு தீர்ந்து - இறுதியில்
அமைதியாய் மரணித்தது!