நிறையாத வாழ்க்கையின் முரண்பாடாய்
நான் நின்றிருக்க - இதோ இன்றோடு
ஏழு வருடம் நிறைகிறது!
தெருமுனை விளக்கின் வெளிச்சத்தில்
உன் தலை தெரியாதா என்று
நான் தேடிய நாட்களை, இன்று
கிழிக்கப்படாத நாள் காட்டியில்
தேடி கொண்டு இருக்கிறேன்!
ரசித்து பார்த்த தெருமுனை
விளக்குகளும் தூரமாகி போனது!
அகத்தின் அழகு முகத்தில் தெரிய,
மனதின் வெறுமையை நெற்றியில் காட்டினேன்!
வெள்ளை நிற சுவர்களில் - நீ
பதித்த சுவடுகளை, இருட்டிலும்
தேடி உறக்கத்தை தொலைத்தேன்!
கதவுகளை மூடிய அறைக்குள்
உன் தொலைந்து போன
சுவாச காற்றை அறிய
என் சுவாசம் குறைத்தேன்!
கண்களில் நிரந்தர சோகமும்,
உதடுகளில் வெற்று சிரிப்புமாய்,
வாழும் வாழ்க்கை முறையை கற்று கொண்டேன்!
பெண்களின் பயணம் முட்கள் நிறைந்தது தான்!
முட்கள் இருக்கும் ரோஜா பூவைதான்
அவளும் விரும்புகிறாள் ,
உன்னை நான் விரும்புவது போல!
முட்களின் வலிகள் என்றும் மரணம் தருவதில்லை!
ஆனால் உன் நினைவுகளின் வலிகள்
முட்களாய் குத்தும் எனில்
மரணமே பரவாயில்லை!
உலகில் மரணம் புதிதல்ல!
தினம் தினம் இறக்கின்றனர்!
நீயும் இறந்தாய் அன்று!
அன்று முதல் இன்று வரை
நானும் இறக்கிறேன்,
நிரந்தர மரணம் ஏற்படாமல்!
நிஜம் என்ற இரும்பு பாறையில் முட்டி,
உன் நினைவுகளை தொலைத்து,
இனியாவது புதிதாய் பிறக்க வேண்டும்!
நாளை என்ற விடியலில் - நீ
பார்த்திராத , தொட்டிராத
நம்முடைய மகனோடு
வெகு தூரம் செல்ல வேண்டும்!
இதை நான் நினைத்து கொண்டே இருக்க,
நம்முடைய மழலை ஓடி வந்து
என்னிடம் கேட்கிறான்!
"என் தந்தை என்னை திருவிழாவிற்கு அழைத்து செல்வார்!
இது இறந்த காலமா? , நிகழ் காலமா? அல்லது எதிர் காலமா?"
காலங்களை தொலைத்த என் கண்கள்
மறுபடியும் வெள்ளை சுவரில்
உன் சுவடுகளை தேடி அலைகிறது!
No comments:
Post a Comment