Tuesday, December 18, 2012

சுடும் விழி!

உண்மை சுடும் என்று
தவறாக நினைத்து - உன் 
காதலை மறைத்தாயோ?
உன் மை விழிப்பார்வை - எனை 
பார்க்க தவறும் பொது  - என் 
இதயம் சுடுவது தான் 
உண்மை காதலியே!

மானுடம்!

மானுடம் காக்க 
நான் ஒன்றும் புத்தனும் அல்ல!
நீ ஒன்றும் காந்தியும் அல்ல!
புற்களை மிதித்துதான் 
பாதைகள் செய்தோம்!
பாதைகள் இல்லையெனில் 
நீயும் நானும் - இன்று 
சந்தித்திருக்கவே மாட்டோம்!

நினைவுகளோடு!

சூது கவ்வும் வேளையில்,
வீதி வெளி போனேன்!
பாதி வழியிலே மறிக்கப்பட்டு,
நாதியற்று நின்றேன்!
மறித்த பூதம் உயிரை கேட்டால் குடுத்திருப்பேன்!
இதயம் பிடுங்கி,
குருதியில் கண்ணீர் கலந்து அனுப்பியது!
கண்ணீர் ஒன்றும் என் வாழ்வின் 
சித்தம் அல்லவே!
கண்ணை மூடி கண்ணீர் மறைத்தேன்!
அடங்க மறுத்த துளிகள்,
இல்லாத இதயத்தை 
நனைக்க வழிந்தோடியது!
வெறுமை உணர்ந்த துளிகள்,
என்னுள் தீராது தங்கி போன 
நினைவுகளை தேடி சென்றது!
இதயம் இல்லா நினைவுகள்,
வலிகள் தான் சுமக்கும் என்பதை,
நான் அறியாதவனா?
காயங்களான என் நினைவுகளை 
உப்பு துளிகள்,
மோசமாய் துளைத்தன!
என் தேகத்தை சுருக்கிடும் காலமே!
என் வலி தரும் நினைவுகளை மட்டும் 
ஏன் இளமையாய் வைத்திருக்கிறாய்!
மூடிய இமைகளுக்குள்ளும்,
தெளிவாய் ஓடும் நினைவுகளே!
நீ எனக்கு மட்டும் சொந்தம் அல்ல!
என் இமை பார்த்து இதயம் சிரிக்க பேசிய 
இதழ்களை நீ அறியவில்லையா?
நினைவுகளே!
உங்களின் நினைவுகளை தொலைத்து விட்டு,
எனக்கு மட்டும் வலி தருவது ஏனோ?
கண்ணீர் கலந்த பூதமே,
என் இதயத்துடன் நினைவுகள் 
இலவச இணைப்புதான்!
தயக்கம் வேண்டாம்,
என் உயிரோடு நினைவுகள் கலந்து மறையும் முன்,
துரிதமாய் வந்து எடுத்து செல்!
வலி சுமக்கும் நினைவுகளோடு,
உன் வழி நோக்கி காத்திருக்கிறேன்!

நெருப்பு!


நெருப்பின் மேலே நிற்கிறோம்!
நெருப்பின் மேலே நிற்கிறோம்!
மனிதனாய் பிறந்த நாம்,
நெருப்பின் மேலே நிற்கிறோம்!
வலியின் வேதனை உணரும் போது 
எரிதனல் வேகம் கூடுதே!
வலியில்லா வாழ்க்கை, 
உயிரில்லா உடலுக்கு மட்டும் சொந்தமோ!
செந்தனல் காற்று தேகம் கருக்குதே!
வழியில்லா கண்கள் 
வலி தாங்காது அழுதே!
வீசும் குளிர் தென்றலும் - வெப்பம்தான் 
கக்கும் எனில் சுவாசிக்க 
நாசி எதற்கு!
பொய் முகம் அழகென்று - கவி 
பாடும் இவ்வுலகில்  - முகங்கள் 
தாமே தொலைகின்றனவே!
தலைமுறைகளின் தாகம் தணிக்க
நிபந்தனையற்ற சாட்சிகளாய் மாறிப்போனோமே!
நெருப்பின் வேகம் கூட கூட 
வன்மம் மனதை முழுதாய் முழுங்குதே!
வெற்று வார்த்தைகளில் 
நெருப்பு அனைவதில்லை!
எனக்காக நீ சிந்தும் கண்ணீரில் 
நெருப்பு அனையுமே!
கண்ணீர் சிந்த நட்பு இல்லையெனில் 
கருகுவதை தவிர - வேறு 
வழி இல்லையோ!
நட்பை தொலைத்து,
எரிந்து சாம்பலாய் போகும் சருகுகளாய்,
ஏன் மாறிப்போனோம்!
மனிதத்தை தொலைத்து 
இருக்கும் போதே இறந்தும் போனோம்!

மேகங்கள்!


மேகங்கள் தானாய் உருவாவதில்லை! 
என் வாழ்வின் மிக சிறிய ஒரு பகுதியில்,
நானும் மேகங்களை உருவாக்கினேன் !
மிக கருமையாய்!
மிக அடர்த்தியாய்!
எத்தனை பெரிது என்று கர்வமும் கொண்டேன்!
குளிர் மழை பொழிந்து,
மனம் மகிழும் தருணம் 
எதிர் பார்த்து காத்திருந்தேன்!
சட்டென்று வீசிய,
பெரிதெனவோ சிறிதெனவோ 
அனுமானிக்க முடியாத,
ஒரு காற்றின் வேகத்தில்,
மேகங்கள் கலைந்தே போயின!..
ஒரு சிறு துளி கூட- நிலத்தை
நனைக்கவில்லை!.. 
நான் கண்ட மேகங்கள்
அனைத்தும் காட்சி பிழையோ?
அல்லது வீசியது புயல் காற்றா?
யார் தவறோ?

ஈரம் பாரா இந்த நிலத்தில் - இனியும்
பூக்கள் பூக்க போவதில்லை!. 
பூக்களை எதிர் பார்த்து நீ இல்லை எனில், 
என் புன்னகையை தருகிறேன்.
இது நான் மேகங்கள் செய்ய தூண்டிய அன்பை 
சிறிதேனும் உனக்கு சொல்லக்கூடும்!

மௌனங்களில் கரைகிறேன்!



மௌனமாய் எனை பார்த்த உன் பார்வை,
மௌனமாய் பதிலளித்த என் சிரிப்பு!
மௌனமாய் உணரப்பட்ட நம் காதல்!
மௌன ஊடல்களில் வளர்ந்த நம் காதல்!
மௌன முடிச்சுகளில் இணைக்கப்பட்ட நம் திருமணம்!
எனக்காக உன் மொழிகளை 
மௌனமாய் மாற்றிய உன் அன்பு!
மௌனமாய் போட்ட சின்னஞ்சிறு சண்டைகள்!
அழகிய மௌனங்களில் கடந்த நம்முடைய நாட்கள்!
பின்னொரு நாளில் மௌனமாய் உன் பிரிவு!
அதன் பின் என் சோகங்கள் நிரந்தர மௌனமாகின!
என் மௌனத்தின் சப்தத்தை உணர 
நீ இல்லை இங்கு!
வீட்டு திண்ணையில் இருக்கும் தூணை போல 
சலனமற்று மௌனமாய் தனியாய் இருக்கிறேன்!
பல வருடங்களாய் என் மௌனத்தை 
புரிய வைக்க முயற்சி செய்கிறேன்!
எவருக்கும் புரியவில்லை! 
புரிந்து கொள்ளவும் நேரம் இல்லை!
நடு சாலையில் என் கைத்தடியை 
இறுகப்பற்றிக்கொண்டு உன்னை நினைத்து 
அடக்கி வைத்த மௌனத்தை உடைத்து
பெரிதாய் கத்துகிறேன்!
அந்த நொடியில் என் மருமகள் என் பேரனிடம் 
சொன்னது இது தான், "தாத்தாவிற்கு பைத்தியம் 
பிடித்து விட்டது. சீக்கிரம் அப்பாவை கூப்பிட்டு வா!"
என் மௌனம் உடைந்து கண்ணீர் வழிந்தது!