Thursday, December 15, 2011

மழை!



மழை வருமோ என்று எண்ணி 
சாலை ஓரம் ஒதுங்கி நிற்க,
அருகில் குடையாய் - நீ 
வந்து நின்றாய்!
மழை மனதுக்குள் பெய்தது! 

கனவென்று அறியா வண்ணம்!




அது ஒரு நீண்ட கனவு!
என் கனவுகளில் என்றும்
தேவதைகள் வருவதில்லை!
சக்தி தரும் வரங்களையும்
பெற்றதில்லை!
உலகில் தேவதைகளை
உருவாக்கும் நண்பர்களே வருவார்கள்!
இதோ நேற்றைய கனவில் தோழியாய்
நீ வந்தாய்!
நிலவின் ஒளித்திரையை கிழித்து கொண்டு,
என் கண்ணின் விழித்திரையில் விழுந்தாய்!
கனவு என்று அறியா வண்ணம்,
கை கோர்த்து நடந்தாய்!
அழகியலை சப்தமாய் வாசிக்கும்
மௌன பூக்களை காண்பித்தாய்!
வெப்பம் தரும் வெயிலில்
மழையாய் பொழிந்து - வளையாத
வானவில்லாய் எனை - தலை
நிமிர வைத்தாய்!
கனவை தொலைத்து - பிதற்றிய
பொழுதுகளை மறக்க செய்தாய்!
உன் சுண்டு விரலை பிடித்து
நடக்கும் போது - கனவின்
நீளத்தை என் விருப்பமில்லாமல்
குறைய வைத்தாய்!
என் கனவுகள் தினசரி
விடியலில் கலைந்து விடாது!
ஏனெனில்உன் கண்களின்
வெளிச்சத்தில் விடியும் - என்
பகல் பொழுதுகள் - எனை
மீண்டும் மீண்டும் மீள முடியா
கனவுகளில் தள்ளுகிறது!

சுவடுகளை தேடும் ஒரு பெண்ணின் குரல் !






நிறையாத வாழ்க்கையின் முரண்பாடாய் 
நான் நின்றிருக்க - இதோ இன்றோடு 
ஏழு வருடம் நிறைகிறது! 
தெருமுனை விளக்கின் வெளிச்சத்தில் 
உன் தலை தெரியாதா என்று 
நான் தேடிய நாட்களை, இன்று 
கிழிக்கப்படாத நாள் காட்டியில்
தேடி கொண்டு இருக்கிறேன்! 
ரசித்து பார்த்த தெருமுனை 
விளக்குகளும் தூரமாகி போனது!
அகத்தின் அழகு முகத்தில் தெரிய,
மனதின் வெறுமையை நெற்றியில் காட்டினேன்!
வெள்ளை நிற சுவர்களில் - நீ 
பதித்த சுவடுகளை, இருட்டிலும் 
தேடி உறக்கத்தை தொலைத்தேன்!
கதவுகளை மூடிய அறைக்குள் 
உன் தொலைந்து போன 
சுவாச காற்றை அறிய 
என் சுவாசம் குறைத்தேன்!
கண்களில் நிரந்தர சோகமும்,
உதடுகளில் வெற்று சிரிப்புமாய்,
வாழும் வாழ்க்கை முறையை கற்று கொண்டேன்!
பெண்களின் பயணம் முட்கள் நிறைந்தது தான்!
முட்கள் இருக்கும் ரோஜா பூவைதான் 
அவளும் விரும்புகிறாள் ,
உன்னை நான் விரும்புவது போல!
முட்களின் வலிகள் என்றும் மரணம் தருவதில்லை!
ஆனால் உன் நினைவுகளின் வலிகள்
முட்களாய் குத்தும் எனில் 
மரணமே பரவாயில்லை!
உலகில் மரணம் புதிதல்ல!
தினம் தினம் இறக்கின்றனர்! 
நீயும் இறந்தாய் அன்று!
அன்று முதல் இன்று வரை 
நானும் இறக்கிறேன்,
நிரந்தர மரணம் ஏற்படாமல்!
நிஜம் என்ற இரும்பு பாறையில் முட்டி,
உன் நினைவுகளை தொலைத்து,
இனியாவது புதிதாய் பிறக்க வேண்டும்!
நாளை என்ற விடியலில் - நீ 
பார்த்திராத , தொட்டிராத 
நம்முடைய மகனோடு 
வெகு தூரம் செல்ல வேண்டும்! 
இதை நான் நினைத்து கொண்டே இருக்க,
நம்முடைய மழலை ஓடி வந்து 
என்னிடம் கேட்கிறான்!
"என் தந்தை என்னை திருவிழாவிற்கு அழைத்து செல்வார்!
இது இறந்த காலமா? , நிகழ் காலமா? அல்லது எதிர் காலமா?"
காலங்களை தொலைத்த என் கண்கள் 
மறுபடியும் வெள்ளை சுவரில் 
உன் சுவடுகளை தேடி அலைகிறது!

அஹிம்சையின் எதிர்வினை!




காந்தியின் அஹிம்சையை கிண்டல் செய்த போது,
காந்தி இப்படி நினைத்திருக்கலாம்!...

"நாணலை போல வளைந்து வளைந்து
 உங்களது இதயத்தின் காயங்களை 
மெலிதாய் வருடுகிறேன்! - இதோ 
என் பின்னால் முதுகினை கீறி,
முதுகெலும்பு உள்ளதா என்று தேடி பார்க்கிறார்கள்!
வழிந்தோடுவது என் குருதி அல்ல!
இத்தனை நாள் உங்களிடமிருந்து - நான் 
திருடி வைத்திருந்த கண்ணீர் துளிகள்!"