Thursday, December 15, 2011

மழை!மழை வருமோ என்று எண்ணி 
சாலை ஓரம் ஒதுங்கி நிற்க,
அருகில் குடையாய் - நீ 
வந்து நின்றாய்!
மழை மனதுக்குள் பெய்தது! 

கனவென்று அறியா வண்ணம்!
அது ஒரு நீண்ட கனவு!
என் கனவுகளில் என்றும்
தேவதைகள் வருவதில்லை!
சக்தி தரும் வரங்களையும்
பெற்றதில்லை!
உலகில் தேவதைகளை
உருவாக்கும் நண்பர்களே வருவார்கள்!
இதோ நேற்றைய கனவில் தோழியாய்
நீ வந்தாய்!
நிலவின் ஒளித்திரையை கிழித்து கொண்டு,
என் கண்ணின் விழித்திரையில் விழுந்தாய்!
கனவு என்று அறியா வண்ணம்,
கை கோர்த்து நடந்தாய்!
அழகியலை சப்தமாய் வாசிக்கும்
மௌன பூக்களை காண்பித்தாய்!
வெப்பம் தரும் வெயிலில்
மழையாய் பொழிந்து - வளையாத
வானவில்லாய் எனை - தலை
நிமிர வைத்தாய்!
கனவை தொலைத்து - பிதற்றிய
பொழுதுகளை மறக்க செய்தாய்!
உன் சுண்டு விரலை பிடித்து
நடக்கும் போது - கனவின்
நீளத்தை என் விருப்பமில்லாமல்
குறைய வைத்தாய்!
என் கனவுகள் தினசரி
விடியலில் கலைந்து விடாது!
ஏனெனில்உன் கண்களின்
வெளிச்சத்தில் விடியும் - என்
பகல் பொழுதுகள் - எனை
மீண்டும் மீண்டும் மீள முடியா
கனவுகளில் தள்ளுகிறது!

சுவடுகளை தேடும் ஒரு பெண்ணின் குரல் !


நிறையாத வாழ்க்கையின் முரண்பாடாய் 
நான் நின்றிருக்க - இதோ இன்றோடு 
ஏழு வருடம் நிறைகிறது! 
தெருமுனை விளக்கின் வெளிச்சத்தில் 
உன் தலை தெரியாதா என்று 
நான் தேடிய நாட்களை, இன்று 
கிழிக்கப்படாத நாள் காட்டியில்
தேடி கொண்டு இருக்கிறேன்! 
ரசித்து பார்த்த தெருமுனை 
விளக்குகளும் தூரமாகி போனது!
அகத்தின் அழகு முகத்தில் தெரிய,
மனதின் வெறுமையை நெற்றியில் காட்டினேன்!
வெள்ளை நிற சுவர்களில் - நீ 
பதித்த சுவடுகளை, இருட்டிலும் 
தேடி உறக்கத்தை தொலைத்தேன்!
கதவுகளை மூடிய அறைக்குள் 
உன் தொலைந்து போன 
சுவாச காற்றை அறிய 
என் சுவாசம் குறைத்தேன்!
கண்களில் நிரந்தர சோகமும்,
உதடுகளில் வெற்று சிரிப்புமாய்,
வாழும் வாழ்க்கை முறையை கற்று கொண்டேன்!
பெண்களின் பயணம் முட்கள் நிறைந்தது தான்!
முட்கள் இருக்கும் ரோஜா பூவைதான் 
அவளும் விரும்புகிறாள் ,
உன்னை நான் விரும்புவது போல!
முட்களின் வலிகள் என்றும் மரணம் தருவதில்லை!
ஆனால் உன் நினைவுகளின் வலிகள்
முட்களாய் குத்தும் எனில் 
மரணமே பரவாயில்லை!
உலகில் மரணம் புதிதல்ல!
தினம் தினம் இறக்கின்றனர்! 
நீயும் இறந்தாய் அன்று!
அன்று முதல் இன்று வரை 
நானும் இறக்கிறேன்,
நிரந்தர மரணம் ஏற்படாமல்!
நிஜம் என்ற இரும்பு பாறையில் முட்டி,
உன் நினைவுகளை தொலைத்து,
இனியாவது புதிதாய் பிறக்க வேண்டும்!
நாளை என்ற விடியலில் - நீ 
பார்த்திராத , தொட்டிராத 
நம்முடைய மகனோடு 
வெகு தூரம் செல்ல வேண்டும்! 
இதை நான் நினைத்து கொண்டே இருக்க,
நம்முடைய மழலை ஓடி வந்து 
என்னிடம் கேட்கிறான்!
"என் தந்தை என்னை திருவிழாவிற்கு அழைத்து செல்வார்!
இது இறந்த காலமா? , நிகழ் காலமா? அல்லது எதிர் காலமா?"
காலங்களை தொலைத்த என் கண்கள் 
மறுபடியும் வெள்ளை சுவரில் 
உன் சுவடுகளை தேடி அலைகிறது!

அஹிம்சையின் எதிர்வினை!
காந்தியின் அஹிம்சையை கிண்டல் செய்த போது,
காந்தி இப்படி நினைத்திருக்கலாம்!...

"நாணலை போல வளைந்து வளைந்து
 உங்களது இதயத்தின் காயங்களை 
மெலிதாய் வருடுகிறேன்! - இதோ 
என் பின்னால் முதுகினை கீறி,
முதுகெலும்பு உள்ளதா என்று தேடி பார்க்கிறார்கள்!
வழிந்தோடுவது என் குருதி அல்ல!
இத்தனை நாள் உங்களிடமிருந்து - நான் 
திருடி வைத்திருந்த கண்ணீர் துளிகள்!"

Thursday, September 01, 2011

ஒரு நடிகனும் பல ரசிகர்களும்....

அஜித் குமார் - தமிழ் சினிமாவில் என்றும் அதிகமாக விமர்சிக்கப்படும் நடிகர். நிறைய தோல்விகளை மட்டும் சந்தித்தவர். வெற்றி என்பது இவரது வாழ்க்கையில் அரிதான ஒன்று. வசன உச்சரிப்பு சரியாக வராது. நடனம் ஆட தெரியாது. அழ தெரியாது. உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க தெரியாது. இன்னும் நிறைய தெரியாது என்று பெரும்பான்மையான மக்களால் விமர்சிக்கபடுபவர். திமிரானவர், மற்றவர்களை மதிக்காதவர், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார் என்று இவரை பற்றிய விமர்சனங்கள் எக்கச்சக்கம். 

பொதுவாக சொல்வதென்றால், ரசிகர்களுக்கு என்று எதையும் செய்யாதவர். அரசியல் கட்சிகளை ஆதரித்து, ரசிகர்களுக்கு கவுன்சிலர் பதவி வாங்கி தர வேண்டாம். குறைந்த பட்சம் வரிசையாக வெற்றி படங்களையாவது ரசிகர்களுக்கு தரலாம். ஆனால் அதுவும் இவரால் முடியவில்லை. ரசிகர் மன்றங்களை சமீபத்தில் கலைத்தார். ரசிகர்கள் என்னுடைய புகைப்படத்தை குடும்ப விழாக்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். ரசிகர்கள் என்னை ஆராதிப்பதை விட அவர்களுடைய குடும்பத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறினார். 

சினிமாவில் சம்பளம் வாங்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நிச்சயம் அவர் தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய சுய தேவைக்காக பயன்படுத்த போவதில்லை. வெளியிலிருந்து பார்த்தால், அஜித் என்னுடைய தலைவன் என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு அஜித் எதுவும் சாதித்ததாய் தெரியவில்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இரண்டு தோல்விகளுக்கு பிறகு வந்திருக்கிற மங்காத்தாவிற்கு கிடைத்திருக்கும் Opening ஆச்சரிய படவைக்கிறது.

மிகபெரிய opening. இத்தனைக்கும் promotion வேலைகள் எதுவும் பெரிதாய் நடக்கவில்லை.  எப்படி இவ்வளவு பெரிய opening? எப்படி இது சாத்தியமானது? அஜித்திடம் ஏதாவது மந்திர கோல் இருக்கிறதா? நான் இங்கு இதற்கு விடை காண முயற்சி செய்ய போகிறேன்.. 

அஜித் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் போரட்டத்துடனையே சந்தித்தார். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், தனது கனவு லட்சியமான Raceக்காக, பணம் செய்வதற்காக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். எதுவும் சரியாக அமைய வில்லை. அழகான சிவப்பான இளைஞனாக மட்டுமே அறியப்பட்டார். அமராவதி படத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்கள் விபத்தினால் படுத்த படுக்கை ஆனார். சினிமாவில் நடித்து பணம் சம்பாதிக்கும் சாதுர்யம் தெரியவில்லை. அமராவதியில் நடித்த போது கிடைத்த பணத்தை வைத்து கொண்டு motor race-ல் கலந்து கொண்டு விபத்தில் சிக்கினார். தான் கொண்ட இலட்சியத்திற்காக உயிரை விட துணிந்தார். இளமையின் வேகம் பணத்தின் அருமையை அறியவில்லை. 

இவ்வளவு பெரிய விபத்திற்கு பிறகு, சினிமாவில் நடிப்பது மட்டுமே நடைமுறைக்கு உதவும் என்ற கசப்பான உண்மையில் மனம் தத்தளித்தது. கிடைத்த படத்தில் எல்லாம் நடித்தார். மனம் முழுவதும் வேறு லட்சியம், உடல் நடிப்பதற்கு முயற்சி செய்தது. நிறைய தோல்விகளை சந்தித்தார். முதல் மற்றும் முழுமையான வெற்றி, ஆசை என்கிற படத்தில் வந்தது. Chocolate Boy ஆக அறிமுகமானார். பெண் ரசிகர்கள் நிறைய கிடைத்தனர். பிறகு காதல் கோட்டை. பெண் ரசிகர்களின் நெஞ்சில் கனவு நாயகனாய் நுழைந்தார். 

காதல் மன்னன் - ஆண் ரசிகர்களையும் தன்னை உற்று பார்க்க வாய்த்த படம். வெற்றி ஆரம்பம் ஆனது, வாலி, அஜித் ஒரு சிறந்த நடிகன் என்பதை தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியது, மறுக்க முடியாத உண்மை. வசனம் தேவை இல்லை. என் கண்களின் பார்வை போதும், என் மனதின் கொடுரத்தை சொல்ல என்று மற்ற நடிகர்களுக்கு பாடம் எடுத்தார். இந்த இடத்தில நான் அஜித் ரசிகனானேன். இப்படி பட்ட நடிப்பை நான் தொடர்ந்து அஜித்திடம் எதிர் பார்க்கிறேன். ஆனால் பத்தில் ஒன்று தான் தேறுகிறது.

வாலிக்கு பிறகு என்னை கவர்ந்த படங்கள், அமர்க்களம், முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் , தீனா, வில்லன், அட்டகாசம், வரலாறு,கிரீடம், பில்லா, மங்காத்தா.

50 இல்  13 தேறுகிறது. இடைப்பட்ட காலத்தில் அவர் கொடுத்த பேட்டிகள் அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் காணப்பட்டது. நான் சூப்பர் ஸ்டார் ஆவேன். நான் தான் No.1 என்று பேசிய பேச்சுக்கள் திமிராக பேசப்பட்டதாக அறியப்பட்டது. எனக்கு அப்படி தெரியவில்லை. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தாலும். அவருடைய தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சரிய பட்டேன். தான் கொண்ட இலட்சியத்திற்காக மரணத்தை தொட்டவர், தனது அடுத்த ஆட்டத்தை சினிமாவில் ஆரம்பித்து விட்டதாக தோன்றியது.. மனதுக்குள் Welldone சொல்லிகொண்டேன் . ஆனால் மீடியா இதை தவறாக சித்தரித்து அஜித்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. பேட்டி கொடுப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். மௌனத்தை ஆயுதமாய் பயன்படுத்த நினைத்தார். தன்னை சுற்றி சுவரை எழுப்பினார். நிறைய பெண் ரசிகர்கள் அடுத்த ஆணழகனை தேடி சென்றார்கள். ஆண் ரசிகர்கள் சுவற்றின் ஓரத்திலேயே காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

அஜித்தின் வெறுப்பு விலகி இருக்க சொன்னது. மீடியாக்களின் தவறான பரப்புரைகளால், ரசிகர்கள் அஜித்தை தனிப்பட்ட முறையில் நேசிக்க ஆரம்பித்தனர். நானும் நேசித்தேன். அஜித்திடம் என்னை கண்டேன். அஜித்திடம் இருந்து பாடங்கள் கற்று கொண்டேன். உண்மைய உரக்க சொல் என்று அஜித் தான் எனக்கு கற்று கொடுத்தார். சொல்லி கொண்டே இருக்கிறேன். அஜித் போல அடி வாங்கி கொண்டே இருக்கிறேன். வலிகளை தாங்க அவருடைய மௌனத்தை பின்பற்றுகிறேன். சில மௌனங்கள் வெடிக்கும் போது மிகபெரிய உண்மையை கக்கும். சமீபத்தில் முன்னாள் முதலமைச்சரின் பாராட்டு விழாவிற்கு நிறைய ஹீரோக்கள் கட்டாயத்தின் பேரில் கலந்து கொண்டனர். அஜித்தும் கலந்து கொண்டார்.. ஆனால் வெடித்தார், முதல்வரின் முன்னாலேயே கட்டாய படுத்த படுகிறோம் என்று கூறினார். அனுபவமிக்க, செல்வாக்கு மிக்க ரஜினி கமலால் செய்ய முடியாததை அஜித் செய்து காட்டினார். யாரால் இப்படி பேச முடியும். இதுதான் ஹீரோக்கு அழகு, அஜித் உண்மையான ஹீரோ. மற்றவர்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்தனர். அஜித் சாமானியனாக குரல் எழுப்பி ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக கருதப்பட்டார்.

அஜித் உண்மையில் எனக்கு ஹீரோவாக தெரிகிறார். எனவே தான் அவர் சினிமாவில் வருவதை மட்டுமே விரும்புகிறேன். நடிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவரால் சில ரோல்களை நன்றாக பண்ண முடியும். நல்ல இயக்குனரிடம் அவர் சிக்கும் போது அவரது புதிய திறமைகள் கண்டிப்பாக வெளி வரும். எனக்கு பிடித்த 13 படங்களில் 90% படங்களில் அவரது திறமை சிறப்பாக வெளிபட்டிருக்கிறது. அவர் உண்மையான ஹீரோ என்பதால் ரசிகர்கள் அவரை தனிப்பட்ட முறையிலேயே அணுகுகிறார்கள். அஜித் ரசிகர்களிடம் பேசி பாருங்கள் இந்த உண்மை புரியும். அஜித்தின் படங்கள் ரசிகர்களால் ஓட்டபடுவதில்லை, படம் சரியில்லை என்று தெரிந்தால் விலகி விடுவார்கள். அடுத்த படத்தை உற்சாகமாக எதிர் நோக்கியிருப்பர்கள். 

அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது கண்டிப்பாக நல்ல முயற்சி. ரசிகர் மன்றத்தையும் தாண்டி மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. கண்ணுக்கு புலப்படாத ஒரு மன்றத்தினால் இவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள். எல்லா ரசிகர்களும் தங்களுக்குள் விலகி இருக்கிறார்கள். தலைவனும் விலகி இருக்கிறான். ஆனாலும் இவர்கள் ஒரே மாதிரி சிந்திகிறார்கள். இவர்களிடம் எந்த எதிர் பார்ப்பும் இல்லை. நல்ல படத்தை கூட இவர்கள் எதிர் பார்க்கவில்லை. இப்படி பட்ட ரசிகர்கள் கிடைக்க அஜித் தவம் செய்திருக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த ரசிகன் ஹீரோ உறவு, இந்த உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு. 

நான் முன்பு சொன்னது போல, அஜித் ஒரு சிறந்த தொழிலாளி. எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தனது வேலையை செய்கிறார். நல்ல குடும்பத்தோடு வாழ்கிறார். தன் ரசிகர்களையும் குடும்பத்தை கவனிக்க சொல்கிறார். எனக்கு கட்அவுட் வைப்பதை விட  உன்னுடைய வீட்டுக்கு உழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார். தான் படிக்காத கல்வியை, தன் ரசிகர்களை படிக்க சொல்கிறார். தனது ரசிகர்களை தேவையில்லாத பாதைகளுக்கு வழிகாட்ட அவர் விரும்பவில்லை. எனது சினிமாவை விட உனது வாழ்க்கையே சிறந்தது என்று ரசிகனுக்கு உணர்த்துகிறார். அரசியல் செய்ய ஆயிரம் பேர் உள்ளனர். குழுக்கள் குழுக்களாக நிறைய நடிகர்கள் தன்னுடைய ரசிகர்களை ஒருங்கிணைக்க, அஜித் என்னை ஆச்சரிய படுத்துகிறார்.

அஜித் சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல மனிதனாக என்னுள் அறியபடுகிறார். அவர் என்னை ஆச்சரிய படுத்துகிறார். எனக்குள் உத்வேகத்தை அளிக்கிறார். நான் அஜித் ரசிகனாக இருக்க பெருமை படுகிறேன். நான் அஜித்தை கடவுள் அளவுக்கு சித்தரிக்க முயற்சி செய்ய வில்லை. Ajith is my Inspiration. He is my Role model. I am learning from him. 

இப்போது சொல்லுங்கள் அஜித்தின் ரசிகர்கள் கூட்டம், அவருடைய படத்தின் மூலம் வந்ததா அல்லது அவருடைய தனிப்பட்ட பண்பின் மூலம் வந்ததா?

இந்த கட்டுரையை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

Friday, April 15, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இயற்கையே!
வானிற்கு மாறாத நீலம் தந்தாய்!...
நீல வானில் நட்சத்திரங்கள் பதித்தாய்!..
வாசம் நீங்கா மலர்கள் தந்தாய்!..
இசை குறையாத ஒலி தந்தாய்!.. 
அதிகாலை பனி துளி தந்தாய்!..
விழிகள் மூடும் உறக்கம் தந்தாய்!..
உறக்கம் கலையுமுன் கனவுகள் தந்தாய்!..
உன் படைப்புகள் இத்தனை தான் என்று
நான் வியந்து நிற்க..
உண்மை பேசும் இதழ்கள் செய்தாய்!..
கனவுகளை நிஜமாக்கும் கண்கள் செய்தாய்!..
மலரினும் மெலிதாய் இதயம் செய்தாய்!..
பொய்களை சுடும் வீரம் தந்தாய்!..
சித்திரை வெயிலை பனித்துளியில் நனைத்தாய்!..
உருவம் தந்தாய்!.. உயிர் செய்தாய்!..
இதோ என் முன் நிலவாய்!..
பாட்டி சொல்லும் கதைகளில் வரும் தேவதையாய்!..
தமிழ் கூறும் கவிதையாய்!.. 
என் முன்னே நிறுத்தியிருகிறாய்!..
என்ன சொல்லி நான் இவளை வரவேற்க,
"என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"
உன் கால் தடம் படும் நிலங்கள் பூக்கட்டும்!.. 
கலையாத நினைவுகளுடன்,
- மூவேந்தன்

Monday, January 03, 2011

கரைகளை தேடி...


நான் என்ற சொல்லை நாம் ஆக்கிய நட்பு!
மனதின் தீயை தீபம் ஆக்கிய நட்பு!
கண்ணீர் துளியில் பிம்பங்களாய் விழுந்த நட்பு!
மறதியை துன்பத்திற்காக என்று செய்த நட்பு!
தோழியை தோழனாக்கிய நட்பு!
தோழனை தோழியாக்கிய நட்பு!
சேர்தலில், பிரிதலில் உணரப்பட்ட நட்பு!
காதலை தொடக்கிய ஒரு நட்பு!
காதலின் பிரிவில் தொடங்கிய மற்றொரு நட்பு!
வலிக்கு மருந்திட்ட நட்பு! -பின்பு
வலிமையாய் மாறிவிட்ட நட்பு!
அழியாத நினைவுகளை சுமந்து செல்லும்,
உன் பிரியாத நட்பு!
உன் நட்பின் கரை தேட கடலில் மூழ்க சொன்னது நட்பு!
தேடி தேடி காலங்களை திருடி கொள்கிறது உன் நட்பு!
கரையில்லா கடலில் கரையாமல்
உன் அன்பில் வாழ்கிறது என் நட்பு...
என் உயிர் நட்பு!!!