Monday, January 18, 2010

சின்னஞ்சிறு கவிதைகள்!


உன் கால் தடங்களில்
என் பாதம் பற்றி நடந்த போது,
நான் செல்ல வேண்டிய தூரம் குறுகியது! 
உன் கை பற்றி நான் நடந்த போது,
குறுகிய தூரம் மறுபடியும் 
நீளாதா என்று தோன்றியது! 

உன்னுடைய ஒவ்வொரு அங்கமும் 
சுவாசிக்கின்றன!  - அதை நான் 
உன் அருகில் நெருக்கமாய் அமர்ந்திருக்கும் போது,
மெலிதான வெப்ப காற்றில் உணர்கிறேன்!

இமை மூடாமல் எனை பார்க்கும் உன் கண்கள்,
இன்று அந்த கன நொடி பொழுதில் ,
கண் சிமிட்டிய போது,
கிட்டதட்ட நான் இறந்து போயிருந்தேன்!

உன் மெல்லிய இதழ்களின் ஈரத்தில்,
என் தாகம் தணியும் எனில்,
இதழ்களை அடிக்கடி உள் வாங்கி 
ஈரப்படுத்தி கொள்!
நான் உயிர் வாழ்வதற்காக!

காதலா? கனவா?




உன்னை சந்தித்த அன்றைய பொழுதின் இரவில்,
மீள முடியா கனவில் சிக்கி கொண்டேன் போல!
இதோ இந்த நொடியில் உன்னை காணும்போதும் கூட 
கனவில் இருப்பதாய் உணர்கிறேன்!
மேகங்களின் கருங்கூந்தலால்,
மின்னல் வெளிச்ச பார்வையினால்,
மழை வருமோ என எண்ணி - ஒதுங்க இடம் தேடி 
உன் சேலை தலைப்பை தேடி அலைகிறேன்!
உன் மெல்லிய மௌன புன்னகை,
இரைச்சல் மிகுந்த இந்த மாநகரத்தில் - எனக்கு 
மட்டும் பெரிதாய் கேட்பது ஏன்? - உண்மையில் 
என் மனம் காதலில் உள்ளதா? -இல்லை 
கனவில் உள்ளதா?
என் அருகில் வந்து,என் கன்னத்தை கிள்ளி 
உணர்த்தி செல் பெண்ணே!