Wednesday, September 16, 2009

நான் ஏன் மனிதனாய் பிறந்தேன்.






இது முதல் தடவை அல்ல, நான் இப்படி யோசிப்பது. தினம் தினம் சாலையில் நடக்கும் போதோ அல்லது ஏதோ ஒரு பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து செல்லும் போதோ, இதை நான் யோசிப்பேன். இந்த எண்ணங்கள் எனக்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதனை நான் ஆராய்ச்சி செய்ய முயலும் போதெல்லாம் என் கண்முன்னே நிழல் போல பல விஷயங்கள் வந்து போயின.... அந்த நிழல்கள் என் மனதுக்கு சிறிது வெளிச்சத்தை தந்தன...

அநேகமாய் 24 வருடங்கள், நொடிப்பொழுதில் கழிந்தது போல தெரிகிறது. பிறந்தேன் வளர்ந்தேன். இப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல், என்ன நடக்கிறது என்று புரியாமல், எதில் சென்று முடிய போகிறோம் என்று விளங்காமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என்னை உரசி சென்ற காற்று இதற்கு முன்பு யாரை உரசியது என்று தெரியவில்லை... எங்கு சென்று இது தன்னுடைய பயணத்தை முடித்து கொள்ளும் என்றும் தெரியவில்லை... அந்த காற்றை பின் தொடரும் ஆசையை போல தான் , இந்த தலைப்பை பற்றிய என் பதிவுகள்..


பதிவு- 1
இந்த மின்-பதிவுகள் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்குவதாக வைத்து கொள்வோம்...

அந்த மதியப்பொழுதில் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடந்தது... அங்கே என் கவனத்தில் விழுந்த இரண்டு உருவங்கள், ஒன்று அழுக்கேறிய மனிதன் இன்னொன்று ஐந்து அறிவு கொண்ட நாய். இரண்டு உருவங்களையும் சற்று உற்று கவனித்தேன். எனக்கு இரண்டு உயிர்களின் ஜனனம் அந்த உருவங்களில் நடந்து கொண்டிருப்பதாக பட்டது..
அந்த மனிதன் கடைசியாக குளித்தது அவனுக்கு நினைவில் இருக்காது என்றே எண்ணுகிறேன்.. தன் பசியை தீர்த்து கொள்ள அவன் பிச்சை எடுக்கும் வேலையை மட்டும் செய்து கொண்டிருப்பன் போலும்.. அவனிடம் பேச்சு கொடுக்க என் மனம் வரவில்லை ஏதோ ஒன்று தடுத்தது.. எனக்கு நாய் பிடிக்கும்,, இருப்பினும் அந்த நாயை விரட்ட வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது... அந்த உருவத்திற்கு அப்பால் அந்த மனிதன் இந்த சமூகத்திடம் மனித தன்மையை இழந்து நிற்கிறான்.. மற்ற மனிதர்கள் அவனை ஒரு கழிவு போல பார்ப்பது எனக்கு புரிகிறது.. இந்த வேறுபாடு எதனால் வந்தது ? வெறும் புற தோற்றத்தினாலா? அவ்வாறு பார்ப்பது சரிதானா? இதனை யோசிக்கும் என்னாலும், அவனை தொட்டு பேச முடியாமல் இருக்கிறேன்.. இது எதனால்? மற்றொரு சுத்தமான நாய் இந்த அழுக்கு நாயை பார்த்தால் சிநேகம் கொள்ளுமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு பதில் இருக்கும். மிகச்சரியானவை என்று எதுவும் இருக்க போவதில்லை..

ஆனால் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் அந்த அழுக்கு மனிதனை போல இருக்கும் நிலை ஏற்படில், அப்போதும் இந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருப்பார்களா? நிச்சயம் அப்படி இருக்க முடியாது.. அப்படியென்றால் புறத்தோற்றம் ஒரு பிரச்சினையில்லை.. பிறகு எது தான் பிரச்சினை?.. மனம்.....
ஆம்! மனிதனின் மனம் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்... இந்த மனம் விரும்பிய போது மகிழ்ந்து அழைக்கும், வேண்டாத போது காரி உமிழும். இந்த மனம் தான் பிரபஞ்சத்தின் வாசல், ஆம்! முடிவில்லா வீடு தான் மனம்..
இந்த மனம் எந்த எல்லையை தாண்டியும் யோசிக்கும்.. இந்த முடிவில்லா சிந்தனையின் மிக மோசமான முடிவு தான் மேலே உள்ள சம்பவம்...

இந்த நாய் போன்ற மிருகங்களிடம் கூட இந்த மனிதன் தன் மொழியை புகுத்தி விடுகிறான். தோற்றத்தை வைத்து குறைக்கும் நாய்களை பார்க்கும் போதெல்லாம் மனிதனின் ஆதிக்கம் தெரிகிறது. புறத்தோற்றம் பார்த்து மனிதத்தை சாகடிக்கும் நிலை மாறுமா?

இந்த புறத்தோற்றத்தை விடுங்கள். நம்மிடம் மேலும் சில வல்லவர்கள் இருக்கிறார்கள். மனிதனின் சாதியை,மதத்தை,பணத்தை வைத்தே அவனை நிர்ணயிக்கும் தராசு முட்களாய் இருக்கிறார்கள்..

கடவுள் பேசுகிறேன்! - ஆம்
கடவுள் தான் பேசுகிறேன்!
கல் என்று மண் என்று
வெட்டவெளி என்று -இந்த
பிரபஞ்சத்தை படைத்தேன்!
நெருப்பில் குளித்த பூமியை
குளிர வைக்கும் மந்திரம் போட்டேன்!
நுண்ணுயிர் படைத்தேன்!
ஓரறிவு தந்தேன்!
இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து - என்று
அனைத்து அறிவிலும்
உயிரை படைத்தேன்!
மாயக்கட்டங்களில் பருவ மாற்றங்கள்
தவறாது வருமாறு செய்தேன்!
நீண்ட என் சிந்தனைக்கு பின்
ஆறறிவு உள்ள உயிரை படைத்தேன்!
படைக்க மட்டும் தான் செய்தேன்!
அது எனக்கு பெயர் வைத்தது!
உருவம் கொடுத்தது!
சிலை வைத்து உடைத்தது!
என் பெயர் சொல்லி மதங்கள் செய்தது!
மதங்கள் கூறி உயிரை கொன்றது!
மிருக குணத்தின் விளிம்பையும்
தாண்டிய அது - தன்னை
மனிதன் என்று கூறி கொண்டது!
கொல்லுதல் பாவம் தான் - மனம்
இறுக்கி கேட்கிறேன் - மனிதனின்
மனதினை அழிக்கும் ஆயுதம்
செய்து தாருங்கள்!

பதிவுகள் தொடரும்......