எதையோ இழந்தேன்!
அதையே நினைத்தேன்!
இதழ்கள் சிரிக்க,
இதயம் நொறுங்க,
முரண்களாய் திரிந்தேன்!
கனவும் நினைவும்
உணர்வை உருக்க,
உணரவேண்டிய நான்
உன்னில் தொலைந்து
இழந்ததை தேடினேன்!
நீயோ இதயம் மூடி,
இன்னல் மறைத்து,
பக்குவமாய் வெளியில் எடுத்து
என்னை வைத்தாய்!
விதி எனும் குத்தீட்டிகள்,
உன் இதயத்தில் திரியும் எனைதான்
முதலில் கொல்லும் என நினைத்தாயோ!
பொய்யின் காதல் உனதெனில்,
நிலம் கண்ட கடல் மீனாய் இறந்திருப்பேன்!
மெய்யின் காதல் நமதென்பதாலே,
பிரிந்தும் மகிழ்கிறோம்!
விதியின் போக்கிலே - வாழ்வின்
ஆட்டம் தொடர்கிறோம்!
தூரங்கள் கடந்து, தோல்கள் சுருங்கி
மரணம் தொடும் அவ்வேளையில்,
உன் நினைவுகள் தேடி - நான்
சிந்தும் கண்ணீரில்
குத்தீட்டிகளின் முனைகள் மழுங்கி
நம்மின் காலுக்கு அடியிலே
நமக்கும் முன் இறந்து போகும்!.
நாமோ விதியை வென்று
இறந்தும் வாழ்வோம்!
பிரிவல்ல வாழ்க்கை !
பிரிவின் இனிய நினைவுகளே வாழ்க்கை!