மௌனமாய் எனை பார்த்த உன் பார்வை,
மௌனமாய் பதிலளித்த என் சிரிப்பு!
மௌனமாய் உணரப்பட்ட நம் காதல்!
மௌன ஊடல்களில் வளர்ந்த நம் காதல்!
மௌன முடிச்சுகளில் இணைக்கப்பட்ட நம் திருமணம்!
எனக்காக உன் மொழிகளை
மௌனமாய் மாற்றிய உன் அன்பு!
மௌனமாய் போட்ட சின்னஞ்சிறு சண்டைகள்!
அழகிய மௌனங்களில் கடந்த நம்முடைய நாட்கள்!
பின்னொரு நாளில் மௌனமாய் உன் பிரிவு!
அதன் பின் என் சோகங்கள் நிரந்தர மௌனமாகின!
என் மௌனத்தின் சப்தத்தை உணர
நீ இல்லை இங்கு!
வீட்டு திண்ணையில் இருக்கும் தூணை போல
சலனமற்று மௌனமாய் தனியாய் இருக்கிறேன்!
பல வருடங்களாய் என் மௌனத்தை
புரிய வைக்க முயற்சி செய்கிறேன்!
எவருக்கும் புரியவில்லை!
புரிந்து கொள்ளவும் நேரம் இல்லை!
நடு சாலையில் என் கைத்தடியை
இறுகப்பற்றிக்கொண்டு உன்னை நினைத்து
அடக்கி வைத்த மௌனத்தை உடைத்து
பெரிதாய் கத்துகிறேன்!
அந்த நொடியில் என் மருமகள் என் பேரனிடம்
சொன்னது இது தான், "தாத்தாவிற்கு பைத்தியம்
பிடித்து விட்டது. சீக்கிரம் அப்பாவை கூப்பிட்டு வா!"
என் மௌனம் உடைந்து கண்ணீர் வழிந்தது!
No comments:
Post a Comment