அதிகாலை; நேரம் 4.37; February 20; வருடம் 2230
சூர்யநாராயணன் என்கிற சூர்யாவாகிய நான் இன்னும் இந்த இருட்டு அறையில், மங்கலான வெளிச்சத்தில், கடந்த ஐந்து நாள்களாக எதையோ ஆராய்ச்சி (சொன்னால் உங்களுக்கு புரிய போவது இல்லை. இப்போதைக்கு "எதையோ" என்று வைத்து கொள்ளுங்கள்) செய்து கொண்டு இருக்கிறேன்.என் மனைவி வழக்கம் போல என்னை தொந்தரவு செய்யாமல் வீட்டு வேலைகளையும், மற்ற அலுவல் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறாள். அவளுடன் நான் நேருக்கு நேர் பேசி, காதல் மொழி பகிர்ந்து மாதங்கள் பல ஆகின்றன. எங்களுடைய காதல் திருமணத்திற்கு பிறகு (1000 வருடங்கள் கடந்தாலும் காதல் திருமணங்கள் மறையாது). எங்களுடைய நெருக்கம் குறைந்திருக்கலாம். ஆனால் எங்கள் அன்பு குறையவில்லை. உலகிலேயே மிக அதிகமாய் நேசிக்கும் என் மனைவியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி விட்டு, இப்போது கடந்த ஒரு வருடமாய் என் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி வருகிறேன். இதிலே என் மனைவி விழிக்கு (கயல் விழி - செல்லமாக விழி என்று கூப்பிடுவேன். "ழ" எனக்கு பிடித்த சப்தம்) சிறிது கோபம் தான்.
எனது ஆராய்ச்சியின் வெற்றிகரமான முடிவினை ஒருங்கினைந்த இந்தியாவின் பிரதமரான 15-ஆம் ஞான பிரகாஷிடம் சொல்லும் போது இந்த துன்பங்கள் யாவும் கடந்து போகும். (முதலாம் ஞான பிரகாஷின் மிகச்சிறப்பான ஆட்சிக்கு பிறகு, அரசாங்கம் அவரையே cloning செய்து நிரந்தர பிரதமராக்க முடிவு செய்து விட்டது.)
ஆனால் இந்த நிமிடம் வரை இந்த ஆராய்ச்சியை ரகசியமாகவே வைத்து இருக்கிறேன். இப்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடும் மக்களின் அந்தரங்கமும் அரசு இயந்திரத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் கண்காணிக்கப்படுகிறது. குற்ற செயல்களை தடுத்து நிறுத்தவும், அரசுக்கு எதிரான புரட்சியை ஆரம்பித்திலேயே களையவும்தான் இந்த ஏற்பாடு. ஆனால் எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் எனது அறையில் நுழையா வண்ணம் Hack செய்து விட்டேன். கடந்த ஒரு வருடமாக அரசுக்கு என் மீது சந்தேகம் வரவில்லை.
2150களில் விண்வெளி பயணங்கள் சமூகமயமாக்கப்பட்டவுடன், வீட்டுக்கு வீடு விண்வெளி கலங்கள் வாங்கி வைத்து பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதனால் குற்றவாளிகள் தப்பித்து செல்வது எளிதானது. குற்றங்கள் பெருகின. ராக்கெட் தொழில்நுட்பம் சந்தைகளில் கூவி கூவி விற்கப்படும் விஷயமானது. எனது தந்தையும் மக்களுக்கு ராக்கெட் செய்து கொடுக்கும் தொழிற் நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால் 2200-இன் தொடக்கத்தில் இவை எல்லாம் தடை செய்யப்பட்டது. எல்லா குடிமக்களும் கண்காணிக்கப்பட்டனர். நான் மருத்துவம் படித்திருந்தாலும் தந்தையின் இறப்புக்கு பிறகு ராக்கெட் தொழில்நுட்பத்திலும் விண்வெளி துறையிலும் சாதிக்க நினைத்திருந்தேன். அரசாங்கத்தின் தடையினால் இந்த இருட்டு அறைக்குள் சிம்னி விளக்கில் (மற்ற விளக்குகளில் உள்ள அடையாள எண் காட்டி கொடுத்து விடும்) ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய பின்புல அறிமுகங்கள் உங்களுக்கு சற்றே அயற்சியை கொடுத்திருக்கும். எனது கண்டுபிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இந்த இருட்டு அறையில் உங்களுக்காக சற்று வெளிச்சத்தை கூட்டுகிறேன். இதுதான் என் கண்டுபிடிப்பு.
HPSR - 001
High Power Space Rocket - இதுதான் இப்போதைக்கு உலகிலேயே மிக வேகமான ராக்கெட். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இப்போது மணி 5AM. இந்த நொடியில் நான் ராக்கெட்டை செலுத்த ஆரம்பித்தால், மதிய சப்பாட்டிற்கு புளூட்டோவிற்கு சென்று விடலாம் (12PM). வாயை பிளக்காதீர்கள். இதோடு முடிந்து விடவில்லை என் ஆராய்ச்சி. எனக்கு இது பயணக்கருவிதான். என்னுடைய முதல் கண்டுபிடிப்பு மேலும் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.
"Another World Like Earth" - ஆம். மாற்று உலகம் இந்த பூமியினை போலவே இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. புரியும்படி சொல்வதென்றால், Electron எதிர்தன்மை கொண்ட மூலக்கூறு, Positron நேர்தன்மை கொண்ட மூலக்கூறு. இரண்டும் ஒன்றிலிருந்து பிரிந்ததுதான். இரண்டும் ஒரே குணங்களை கொண்டிருக்கும். என்னுடைய ஆராய்ச்சி முடிவிலும் இரண்டு பூமிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்தேன். இரண்டாவது பூமி இருக்கும் இடத்தையும் சரியாக கணித்து வைத்துள்ளேன். தூரத்தை கூறி உங்களை குழப்ப விருப்பம் இல்லை. அந்த பூமிக்கு சென்று மறுபடி வர சரியாக ஒரு வருடம் பிடிக்கும். (செல்வதற்கு ஆறு மாதம். திரும்பி வர ஆறு மாதம்) என்னுடைய திட்டமெல்லாம், எனது அதிவேக ராக்கெட்டை அறிமுகப்படுத்துவதும், இரண்டாம் பூமியிலுள்ள ஏதாவது ஒரு மனிதரை இங்கு கொண்டு வந்து உலகிற்கு அடையாளம் காட்டுவதும்தான். எல்லாம் தயாராகி விட்டது. எல்லாம் ரகசியமாக இருந்தாலும், விழியிடம் ஒரு வருடம் பிரிய அனுமதி வாங்க வேண்டும்.
March 1 2230, 10AM
கடந்த வாரம் முழுவதும் விழியிடம் அனுமதி வாங்கவே நேரம் சரியாக இருந்தது. ஏற்கனவே அவள் என்னை அதிக காலம் தனிமையில் விட்டிருந்ததால், அவள் என்னை அனுமதிக்க தயாராக இல்லை. மேலும் எங்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை. நான்தான் தள்ளி போட்டு கொண்டே இருக்கிறேன். இப்போதைய சட்டப்படி ஐந்து வருடங்கள் யாரும் குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தால் அவர்களுடைய திருமணம் தானாக ரத்தாகி விடும். இருவரும் பிரிந்து மற்றொரு நபரை திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ள வேண்டும். (2010இல் 100 கோடியாக இருந்த மக்கள் தொகை 10 வருடத்திற்கு முன் வெறும் 25 கோடியாக குறைந்து விட்டது. மக்களுக்கு குழந்தைகளை பெற்று வளர்க்கும் ஆர்வம் குறைந்ததே இதற்கு காரணம். இந்த சட்டம் இயற்றப்பட்டவுடன் மக்கள் தொகை 40 கோடியாக உயர்ந்து உள்ளது) இதனையும் மீறி குழந்தை பெற்று கொள்ளவில்லை எனில், அவர்களின் விருப்பமான வாழ்க்கை ரத்து செய்யப்பட்டு அரசாங்கத்தின் விருப்பப்படி வாழ பணிக்கப்படுவார்கள்.
இது போன்ற சிக்கல்களினால் கடந்த ஒரு வார காலமாக அவளிடம் கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தேன். இறுதியில் இன்னும் இரண்டு வருடம் மீதம் உள்ளமையால் ஒரு வருட பயணம் முடிந்து வருவதாய் கூறி அனுமதி வாங்கி விட்டேன். எனக்கும் இதில் வருத்தம்தான். காதல் மனைவி. தினம் தினம் அவள் நினைவு என்னை வாட்டும். மறுபடியும் இந்த ஒரு வருடத்தை எப்படி தனிமையிலே கழிக்கிறது. நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இறுதியாக ஒரு உபாயத்தை கையாள முடிவு செய்தேன். நான் மருத்துவன் என்பதால் சில வருடங்களுக்கு முன்பு ஒரு Tablet கண்டுபிடித்திருந்தேன் (LS-216). இந்த LS-216 நீண்ட தூக்கத்தையும், உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கும். எனது ராக்கெட்டில் உள்ள ரோபோ, நான் நிலையாய் இல்லாமல் எப்போதும் இயங்கும்படி பார்த்து கொள்ளும். இதனால் என் எலும்புகள் பாதுகாக்கப்படும். எனவே இரண்டாம் பூமி இருக்கும் இடத்தை ராக்கெட்டில் set செய்து விட்டு ஆறு மாத காலம் எதை பற்றியும் நினைத்துக் கொள்ளாமல் தூங்க போகிறேன்.
March 1 2230 7PM
புறப்பட தயாராகிவிட்டேன். நான் திரும்ப வரும் தேதியை விழியிடம் சரியாக சொல்லியிருக்கிறேன். இதுதான் என் பயண அட்டவணை...
என்னுடைய பூமியிலிருந்து புறப்படும் தேதி/நேரம் : March 1 2230 7PM
இரண்டாம் பூமியை சென்றடையும் தேதி/நேரம் : September 1 2230 5PM
இரண்டாம் பூமியிலிருந்து புறப்படும் தேதி/நேரம் : September 1 2230 7PM
என்னுடைய பூமிக்கு வந்து சேரும் தேதி/நேரம் : March 1 2231 5PM
விழியின் கண்ணீர் கலந்த பிரியா விடைக்கு பின் ராக்கெட்டை இயக்கிவிட்டேன். ராக்கெட் நான் நினைத்ததை விட நன்றாக வந்துள்ளதால் சீக்கிரம் போய்விட முடியும் என்று நினைக்கிறேன். ராக்கெட்டை Auto Mode-க்கு மாற்றிவிட்டு விட்டேன். இனிமேல் LS-216-ஐ விழுங்கி விட்டு தூக்கம் தான். September 1-இல் சரியாக எழுப்புவதற்கு, என்னுடைய ரோபோ IR-232-இல் Program செய்து விட்டேன். Tablet போட்ட பின்பும் விழி தூக்கம் வராமல் தடுத்தாள். அவளை நான் அதிகமாக கஷ்டப்படுத்திவிட்டேன். குழந்தை பிறக்காவிட்டால் வேறு ஒருவருக்கு திருமணம் செய்யும் அரசாங்கம் மீது மேலும் கொபம் வந்தது. விழியை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. பிரிப்பவர்கள் இந்த உலகில் இருக்க கூடாது. கூடாது. கூடாது. கூடாது. கூடாது. கூடா.. கூடா....கூடா.....கூ...கூ...கூ...........................................................................................................
[தேதியில் சின்னதாய் ஒரு குழப்பம். இப்போது தேதி March 1 2231, 5PM]
தூக்கம் கலைவது நன்றாகவே எனக்கு தெரிய ஆரம்பிக்கிறது. இதோ முற்றிலுமாக கலைந்து விட்டது. எனது கை கடிகாரத்தை பார்க்கிறேன். March 1 2231, 5.05PM. எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. September 1-இல் தான் நான் தரையிறங்கியிருக்க வேண்டும். எனது ராக்கெட் சதி செய்து விட்டது. ராக்கெட்டின் ஜன்னல் வழியாக நான் இறங்கிய இடத்தை பார்க்கிறேன். மேலும் அதிர்ச்சி! இது நான் ஒரு வருடத்திற்கு முன்னால் கிளம்பிய அதே இடம் தான். அப்படி என்றால் இந்த ராக்கெட் U Turn அடித்து மறுபடி வந்த இடத்திற்கே வந்திருக்க வேண்டும். விழி முகத்தை எப்படி பார்ப்பேன். எனக்கு தலையே சுற்றுகிறது. ச்சே... எந்த பலனும் இல்லாமல் ஒரு வருடத்தை தொலைத்து விட்டேனே......
அருகில் உள்ள மரத்தில் சாய்ந்து உலகமே கேள்விக்குறியாய் உட்கார்ந்திருக்கும் வேளையில், எனது கடமை தவறாத ரோபோ எனக்காக Coffee போட்டு எடுத்து வருகிறது. அது கிட்ட வர வர எனக்கு ஒரு விஷயம் தெரிய ஆரம்பித்தது. என் கண்கள் ஆச்சரியத்தில் மின்னின! எனது ரோபோவின் இதய பகுதியில் உள்ள திரையில் தேதி September 1 2230 5.10PM என காண்பித்தது.
எனக்கு அப்போதுதான் சில உண்மைகள் விளங்க ஆரம்பித்தன. எனது கை கடிகாரங்கள் எப்போதும் Satellite நேரத்தையே காண்பிக்கும். ஆனால் ரோபோ அப்படி அல்ல. எப்போதும் System Time-ஐ மட்டுமே காட்டும். எனக்கு மேலும் குழப்பம் அதிகமானது. அப்படியென்றால் இது இரண்டாம் பூமி தான்.! வெற்றி! வெற்றி! என்னுடைய உழைப்புக்கு பலன் கிடைத்துவிட்டது. ஆனால் ஏதோ ஒன்று இங்கு வித்தியாசப்படுகிறது. முதலில் இரண்டாம் பூமியிலுள்ள எனது வீட்டை பார்க்க வேண்டும். ராக்கெட்டில் உள்ள வண்டியை எடுத்து கொண்டு வேகமாக எனது வீட்டிற்கு செல்கிறேன். போகும் வழியில் உள்ள விளம்பர Digital Board-ம் March 1 2231 5.15PM என்றே காட்டுகிறது.
நான் வீட்டிற்கு செல்வதற்கும், வீட்டிலுள்ள என் கார் கிளம்புவதற்கும் சரியாய் உள்ளது. என்னுடைய காரை எடுத்து செல்வது யாராக இருக்கும்? அந்த காரை பின் தொடர்ந்து கொண்டே நானும் செல்கிறேன். அது நேராக என் மருத்துவமனைக்கு சென்றது. இப்போது என் கைகடிகாரத்தில் நேரம் March 1 2231 5.30PM.
அந்த காரிலிருந்து இறங்கிய உருவத்தை பார்த்தவுடன் நான் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். அது நான்தான். என்னை போல அச்சு அசலாக இருக்கிறான். இப்போதுதான் எனக்கு குழப்பம் அதிகமானது. இரண்டாம் பூமியில் என்னை போல் ஒருவனா? என்னுடைய அந்த Replica மருத்துவமனைக்குள் நுழையும் முன் ஏதோ யோசித்து பதட்டத்துடன் இருந்தான். கைகடிகாரத்தை பார்த்தான். பின்னர் சட்டென்று திரும்பி மறுபடியும் காரை எடுத்து கொண்டு வீடு இருக்கும் திசையில் சென்றான். நானும் விடாமல் பின் தொடர்ந்தேன். வீட்டை அந்த கார் அடைந்ததும், என்னுடைய Replica வேக வேகமாய் வீட்டினுள் சென்றது. நான் வீட்டின் அருகில் மறைவாய் நின்று கொண்டு யோசித்து கொண்டிருக்கிறேன். எனக்கு சில உண்மைகள் புரிய ஆரம்பித்தது. இரண்டாம் பூமி என்னுடைய பூமியை போலவே உள்ள Replica. சரியாக சொல்வதென்றால் ஆறு மாதம்தான் வித்தியாசம் இந்த உலகிற்க்கும் என்னுடைய உலகிற்கும். மேலும் இந்த உலகம் ஆறு மாதம் Future-இல் உள்ளது.
நான் ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன். இந்த Replicaவை விழியிடமும், அரசாங்கத்திடமும் காண்பிக்க வேண்டும். Replicaவை கூப்பிட்டால் வருவானா? யோசித்து கொண்டு இருக்கும் போதே வீட்டில் இருந்து துப்பாக்கி சப்தம் கேட்டது, நான் அவசர அவசரமாக உள்ளே ஒடினேன். என்னுடைய அதே வீடு, அதே அறைகள். விழியின் படுக்கை அறையின் வாசலில் துப்பாக்கியுடன் Replica நின்று கொண்டிருந்தான். அவன் ஏற்கனவே அழுது கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் மேலும் அதிர்ச்சியானான். அவன் சுட்டது விழியை. அவள் தலையில் குண்டடி பட்டு படுக்கையில் அலங்கோலமாக கிடந்தாள்.
குற்றம் நடந்த அடுத்த சில நொடிகளில் Police வந்து விடும் என்பதால் அவனுடைய சம்மதத்தை வாங்காமல் அவன் தோளை பிடித்து இழுத்து கொண்டு என் ராக்கெட் இருக்கும் இடத்திற்கு சென்றேன். அவனை ராக்கெட்டினுள் கூட்டி சென்று ராக்கெட்டை வேகமாக இயக்கினேன். நேரம் எனது கைகடிகாரத்தில் March 1 2231 7PM ; எனது ரக்கெட்டில் உள்ள System Time September 1 2230 7PM
அவனிடம் மன்னிப்பு கேட்டேன்.
"உனக்கு வேறு வழியில்லை. Police-இடம் இருந்து தப்பிக்க எனது ராக்கெட் ஒன்றே தீர்வு. இது உலகிலேயே அதிவேகமானது" நான் சொல்ல சொல்ல தலை குனிந்து கொண்டு அமைதியாக இருந்தான். விழி விழி என்று முனகி கொண்டு இருந்தான். அவனிடம் மேலும் பேச்சு கொடுத்து கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவனுக்கு என்னுடைய Tablet-ஐ Coffee-இல் கலந்து கொடுத்து விட்டேன். அவனும் தூங்கி விட்டான். நான் யோசித்து கொண்டே இருக்கிறேன். இவன் சத்தியமாக என்னுடைய Character இல்லை. விழியையே கொல்லும் அளவுக்கு கொடூரமானவனாக இருக்கிறான். எப்படிதான் மனசு வந்ததோ?
மறுபடியும் விழி என் நினைவுக்குள் வந்து விழுந்தாள். அவள் மாசு கலக்காத மென்மையான மலர். அவளை பிரிந்து இவ்வளவு நாள் இருந்தது தவறு. இனிமேல் ஆராய்ச்சி எல்லாம் இரண்டாம்பட்சம்தான். Tablet போட்டு கொண்டேன். விழி விழி விழி விழி என்று சொல்லி கொண்டே தூங்கி போனேன்.
March 1 2231 5PM இடம்: முதல் பூமி
என்னுடைய ராக்கெட்டை மறைத்துவிட்டு அந்த Replicaவையும் தூக்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். விழி என்னை பார்த்ததும் கண்ணீர் ததும்ப கட்டி அணைத்து கொண்டாள். Replicaவை பார்த்ததும் அவள் ஆச்சர்யத்தில் மிதந்தாள். ஆனால் அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. இதய துடிப்பு எல்லாம் நன்றாக உள்ளது. இந்த Tablet LS-216ஐ மூன்று தடவை தொடர்ச்சியாக எடுத்து கொண்டால்தான் இந்த மாதிரி பிரச்சினை வரும். ஆனால் இவனுக்கு நாம் ஒரு தடவை தானே கொடுத்தோம். இவனுக்கு ஏன் இப்படி ஆனது? இதனை சரி செய்ய மருந்து என் மருத்துவமனையில்தான் உள்ளது. இது தானாகவும் சரியாக வாய்ப்புள்ளது. சரியாகும் போது ஞாபகமறதி ஏற்படும் எனவே நான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விழியிடம் விடை பெற்றேன். வெளியில் வந்து காரை எடுத்தேன். Satellite நேரத்தை காண்பிக்கும் என் கைகடிகாரம் March 1 2231 5.30PM என்று காண்பித்தது. எனக்கு ஏதோ ஒன்று உறுத்தலாக இருந்தது. யாரோ பின்தொடர்வது போல ஒரு உணர்வு. காரை விரைவாக ஒட்டினேன். மருத்துவமனை வந்தது. படி ஏறுகிறேன். கைகடிகாரத்தை பார்க்கிறேன். March 1 2231 6PM. என் மூளையில் பெரிதாய் ஒரு சப்தம். "இதே தேதியில்தான் இரண்டாம் பூமியில் விழி கொலை செய்யப்பட்டாள்" அப்படியானால் அந்த Replica விழித்து கொண்டு ஞாபகமறதியில் மறுபடியும் விழியை கொல்ல நினைத்தால்? எனக்கு பதட்டம் அதிகமானது. வேகவேகமாய் இறங்கி காரை வீட்டிற்கே செலுத்தினேன். மறுபடியும் யாரோ என்னை பின் தொடர்வதாய் ஒரு உணர்வு.
வீடு வந்தது. உள்ளே போனேன்.
சற்று நேரம் சூர்யாவை தவிர்க்க:
சூர்யா வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்ட அதே நேரத்தில், Replica விழித்து கொண்டான். இப்போது Replicaவின் பார்வையில்,
வெறித்தனமான தூக்கம். நான் எங்கு இருக்கிறேன். எல்லாம் கனவு போல இருக்கிறது. விழியை துப்பாக்கியால் சுட்டது மாதிரி ஞாபகம். பக்கத்து அறையில் இருந்து சப்தம் கேட்கிறது. யாரோ இருக்கிறார்கள். யார் அது? என்று மனதுக்குள் சொல்லியவாறே அருகில் சென்று பார்க்கிறேன். விழி! ஆஹா! விழி சாகவில்லை! எல்லாம் கனவுதான்.
" விழி! விழி! இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கூறிக் கொண்டே அவள் அருகில் சென்றேன்.
அவளோ, "என்னங்க Hospital போய்ட்டு அதுக்குள்ள வந்துட்டீங்களா? அந்த Replica இல்லையா?" என்று கேட்டாள்.
அவள் பேசுவதை நான் சட்டை செய்யாமல் "விழி நான் உன்னை கொல்வேனா?" என்று கூறியபடியே அவள் கையை பிடித்தேன்.
அவள் என் கழுத்தை கட்டியவாறே, "ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க என்னை எவ்வளவு Love பண்றீங்கனு எனக்கு தெரியும்" என்று கூறி கொண்டே படுக்கை அறைக்குள் அழைத்து சென்றாள். அங்கு ஒரு பத்து நிமிடம் செலவழித்திருப்போம். திடீரென துப்பாக்கி சப்தம்!...........
கதை மறுபடியும் சூர்யாவிடம் இருந்து:
வீடு வந்தது. உள்ளே போனேன்.
உள்ளே சென்றதும், அந்த படுபாவி Replica நான் நினைத்ததற்கு மாறாக, என் விழியுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்தான். ஆத்திரம் தலைக்கேறிய நான், கோட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனை குறி பார்த்தேன். நான் சுடவும் விழி தலையை தூக்கவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியில் எனது உயிருக்கு உயிரான விழியின் உயிர் அவளிடம் இல்லை. அந்த Replica நாய் கட்டிலின் அந்த புறமாய் பேயறைந்தது போல நின்று கொண்டிருந்தான். கோபம் தாளாமல் அவனையும் சுட்டேன். என் பார்வையிலிருந்து மறைந்து கட்டிலுக்கு பின்னாலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். என் கையாலேயே விழியை கொன்றதை நினைத்து அழுகையும் விரக்தியும் வந்தது, கண்ணீர் முகத்தை கழுவ விழியை விழிகளால் பார்த்து கொண்டே நின்றேன். அப்போது யாரோ என் தோள் மீது கை வைத்து இழுக்க..........
மறுபடியும் சற்று நேரம் சூர்யாவை தவிர்க்க:
நான் அவசர அவசரமாக உள்ளே ஒடினேன். என்னுடைய அதே வீடு, அதே அறைகள். விழியின் படுக்கை அறையின் வாசலில் துப்பாக்கியுடன் Replica நின்று கொண்டிருந்தான். அவன் ஏற்கனவே அழுது கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் மேலும் அதிர்ச்சியானான். அவன் சுட்டது விழியை. அவள் தலையில் குண்டடி பட்டு படுக்கையில் அலங்கோலமாக கிடந்தாள்.
குற்றம் நடந்த அடுத்த சில நொடிகளில் Police வந்து விடும் என்பதால் அவனுடைய சம்மதத்தை வாங்காமல் அவன் தோளை பிடித்து இழுத்து கொண்டு என் ராக்கெட் இருக்கும் இடத்திற்கு சென்றேன்.
கதை மறுபடியும் சூர்யாவிடம் இருந்து:
என் தோள் மீது கைவைத்து கூப்பிட்டவனை பார்த்ததும் வாயடைத்து நின்றேன். இவனும் என்னை போலவே அச்சு அசலாக இருக்கிறான். என்னை கேட்காமலேயே எங்கோ என்னை அழைத்து செல்கிறான். மீண்டும் அதே ராக்கெட். எனக்கு நடப்பெதெல்லாம் கனவு போல தெரிகிறது. விழி உண்மையில் இறந்து விட்டாளா? அவளை நான் கொன்று விட்டேனா? அவன் என்னிடம் ஏதோ கேட்கிறான். எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. விழியின் அலறல் சப்தம் மட்டுமே கேட்கிறது. அவன் Coffee கொடுக்கிறான். அதில் Tablet LS-216 கலந்திருப்பதை அறியாமல் மூன்றவது தடவை இயந்திரமாய் விழுங்குகிறேன். கண்கள் சொருகுகிறது. என் மனதில் இருக்கும் அன்பு விழியை மெல்ல மெல்ல வெளியே கொட்டுகிறேன்..
விழி.. விழி.. விழி.. விழி.. விழி.. விழி.....................................................................................................
முடிவிலா பயணத்தின் அடுத்த தொடக்கம் தொடங்கியது.. சூர்யாவின் கைகடிகாரத்தில் நேரம் March 1 2231 7PM என்று காண்பிக்கிறது.
கதாசிரியரின் கதை குறிப்பு:
இக்கதையில் வரும் சூர்யா, தொடக்கத்தில் ஒரு கொலைக்கு சாட்சியாகவும், பின்பு இன்னொரு கட்டத்தில் கொலை செய்பவனாகவும், மற்றொரு கட்டத்தில் கொலை செய்யப்பட்டவனாகவும் மாற வெவ்வேறு காலத்திற்கு முன்னோக்கியும் பின்னோக்கியும் வருகின்றான்.
கொலைக்கு சாட்சியாக எதிர்கால உலகத்திலும், கொலை செய்ய நிகழ்கால உலகத்திலும், கொலை செய்யப்பட்டு இறந்து போக மறுபடி மற்றொரு எதிர்கால உலகத்திற்கும் பயணிக்கிறான்.
இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் சூர்யாவே காரணமாக இருப்பதுதான் புரியாத பிரபஞ்ச விதி.........
*******