Friday, December 18, 2009

மறந்து போன கவிதை




மஞ்சளும் சிவப்புமாய் அந்தி வானம்....
நிலவின் உடையை மலைகளுக்கு பின்னால் 
மாற்றி கொண்டிருக்கும் சூரியன்...
பனித்துளியின் பரிசத்தில் 
பச்சையாய் பல்லிளித்து காட்டும் இலைகள்....
மனதை வருடும் மகிழம் பூக்களின் வாசனைகள்...
எனக்கான நாளைய கனவுகளை 
மெல்ல மெல்ல சுமந்து வரும் இருள்.. -- என 
இவை அனைத்தும் இருந்தும்,
அவற்றை பற்றி கவிதை எழுதாமல் 
உன் மழலை சிரிப்பையே 
ரசித்து கொண்டிருக்கிறேன்!

Tuesday, September 22, 2009

இசை



நரம்புகள் அறுந்த பின்பும்
வீணை மீட்கிறேன்!
இசைக்காக அல்ல !
உன் இசைதலுக்காக!

Wednesday, September 16, 2009

நான் ஏன் மனிதனாய் பிறந்தேன்.






இது முதல் தடவை அல்ல, நான் இப்படி யோசிப்பது. தினம் தினம் சாலையில் நடக்கும் போதோ அல்லது ஏதோ ஒரு பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து செல்லும் போதோ, இதை நான் யோசிப்பேன். இந்த எண்ணங்கள் எனக்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதனை நான் ஆராய்ச்சி செய்ய முயலும் போதெல்லாம் என் கண்முன்னே நிழல் போல பல விஷயங்கள் வந்து போயின.... அந்த நிழல்கள் என் மனதுக்கு சிறிது வெளிச்சத்தை தந்தன...

அநேகமாய் 24 வருடங்கள், நொடிப்பொழுதில் கழிந்தது போல தெரிகிறது. பிறந்தேன் வளர்ந்தேன். இப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல், என்ன நடக்கிறது என்று புரியாமல், எதில் சென்று முடிய போகிறோம் என்று விளங்காமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என்னை உரசி சென்ற காற்று இதற்கு முன்பு யாரை உரசியது என்று தெரியவில்லை... எங்கு சென்று இது தன்னுடைய பயணத்தை முடித்து கொள்ளும் என்றும் தெரியவில்லை... அந்த காற்றை பின் தொடரும் ஆசையை போல தான் , இந்த தலைப்பை பற்றிய என் பதிவுகள்..


பதிவு- 1
இந்த மின்-பதிவுகள் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்குவதாக வைத்து கொள்வோம்...

அந்த மதியப்பொழுதில் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடந்தது... அங்கே என் கவனத்தில் விழுந்த இரண்டு உருவங்கள், ஒன்று அழுக்கேறிய மனிதன் இன்னொன்று ஐந்து அறிவு கொண்ட நாய். இரண்டு உருவங்களையும் சற்று உற்று கவனித்தேன். எனக்கு இரண்டு உயிர்களின் ஜனனம் அந்த உருவங்களில் நடந்து கொண்டிருப்பதாக பட்டது..
அந்த மனிதன் கடைசியாக குளித்தது அவனுக்கு நினைவில் இருக்காது என்றே எண்ணுகிறேன்.. தன் பசியை தீர்த்து கொள்ள அவன் பிச்சை எடுக்கும் வேலையை மட்டும் செய்து கொண்டிருப்பன் போலும்.. அவனிடம் பேச்சு கொடுக்க என் மனம் வரவில்லை ஏதோ ஒன்று தடுத்தது.. எனக்கு நாய் பிடிக்கும்,, இருப்பினும் அந்த நாயை விரட்ட வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது... அந்த உருவத்திற்கு அப்பால் அந்த மனிதன் இந்த சமூகத்திடம் மனித தன்மையை இழந்து நிற்கிறான்.. மற்ற மனிதர்கள் அவனை ஒரு கழிவு போல பார்ப்பது எனக்கு புரிகிறது.. இந்த வேறுபாடு எதனால் வந்தது ? வெறும் புற தோற்றத்தினாலா? அவ்வாறு பார்ப்பது சரிதானா? இதனை யோசிக்கும் என்னாலும், அவனை தொட்டு பேச முடியாமல் இருக்கிறேன்.. இது எதனால்? மற்றொரு சுத்தமான நாய் இந்த அழுக்கு நாயை பார்த்தால் சிநேகம் கொள்ளுமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு பதில் இருக்கும். மிகச்சரியானவை என்று எதுவும் இருக்க போவதில்லை..

ஆனால் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் அந்த அழுக்கு மனிதனை போல இருக்கும் நிலை ஏற்படில், அப்போதும் இந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருப்பார்களா? நிச்சயம் அப்படி இருக்க முடியாது.. அப்படியென்றால் புறத்தோற்றம் ஒரு பிரச்சினையில்லை.. பிறகு எது தான் பிரச்சினை?.. மனம்.....
ஆம்! மனிதனின் மனம் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்... இந்த மனம் விரும்பிய போது மகிழ்ந்து அழைக்கும், வேண்டாத போது காரி உமிழும். இந்த மனம் தான் பிரபஞ்சத்தின் வாசல், ஆம்! முடிவில்லா வீடு தான் மனம்..
இந்த மனம் எந்த எல்லையை தாண்டியும் யோசிக்கும்.. இந்த முடிவில்லா சிந்தனையின் மிக மோசமான முடிவு தான் மேலே உள்ள சம்பவம்...

இந்த நாய் போன்ற மிருகங்களிடம் கூட இந்த மனிதன் தன் மொழியை புகுத்தி விடுகிறான். தோற்றத்தை வைத்து குறைக்கும் நாய்களை பார்க்கும் போதெல்லாம் மனிதனின் ஆதிக்கம் தெரிகிறது. புறத்தோற்றம் பார்த்து மனிதத்தை சாகடிக்கும் நிலை மாறுமா?

இந்த புறத்தோற்றத்தை விடுங்கள். நம்மிடம் மேலும் சில வல்லவர்கள் இருக்கிறார்கள். மனிதனின் சாதியை,மதத்தை,பணத்தை வைத்தே அவனை நிர்ணயிக்கும் தராசு முட்களாய் இருக்கிறார்கள்..

கடவுள் பேசுகிறேன்! - ஆம்
கடவுள் தான் பேசுகிறேன்!
கல் என்று மண் என்று
வெட்டவெளி என்று -இந்த
பிரபஞ்சத்தை படைத்தேன்!
நெருப்பில் குளித்த பூமியை
குளிர வைக்கும் மந்திரம் போட்டேன்!
நுண்ணுயிர் படைத்தேன்!
ஓரறிவு தந்தேன்!
இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து - என்று
அனைத்து அறிவிலும்
உயிரை படைத்தேன்!
மாயக்கட்டங்களில் பருவ மாற்றங்கள்
தவறாது வருமாறு செய்தேன்!
நீண்ட என் சிந்தனைக்கு பின்
ஆறறிவு உள்ள உயிரை படைத்தேன்!
படைக்க மட்டும் தான் செய்தேன்!
அது எனக்கு பெயர் வைத்தது!
உருவம் கொடுத்தது!
சிலை வைத்து உடைத்தது!
என் பெயர் சொல்லி மதங்கள் செய்தது!
மதங்கள் கூறி உயிரை கொன்றது!
மிருக குணத்தின் விளிம்பையும்
தாண்டிய அது - தன்னை
மனிதன் என்று கூறி கொண்டது!
கொல்லுதல் பாவம் தான் - மனம்
இறுக்கி கேட்கிறேன் - மனிதனின்
மனதினை அழிக்கும் ஆயுதம்
செய்து தாருங்கள்!

பதிவுகள் தொடரும்......

Thursday, May 28, 2009

கவிதை



நான் எழுத மறந்த கவிதையை தான்
தினம் தினம் எழுதுகிறேன்..
ஆனால் என்ன செய்வது,
கவிதை என்பது என்னவென்று தான்
அடிக்கடி மறந்து விடுகிறேன்!

Tuesday, May 26, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆதியில் ஒரு நாள்,
தகித்த பூமியில்,
உயிர் வாசம் அறியாத அந்த நாளில்,
யுகம் யுகமாய் மழை பொழிந்ததாம்!
ராட்சச மழையின் இறுதி துளியில்
மஞ்சளா? சிவப்பா? என்று அறிய
முடியா அழகிய நிறத்தில்
மலர் ஒன்று மலர்ந்தது!
அந்த மலரின் சுவாசத்தில்,
உயிரின் சுவாசம் பிறந்தது!
இன்றும் ஓர் மலர் மலர்ந்துள்ளது!
இந்த மலரின் இதழ் வீசிய தென்றலில்
அக்னி வெயிலின் வெப்பம் தணிந்தது!
பட்டாம் பூச்சியின் சிறகுகளுக்கு
வண்ணங்கள் முளைத்தன!
பன்னிரு மாதங்களும்
குளுமையை மட்டுமே காட்டின!
மழலையின் இதயங்கள்
வாழ்த்துக்கள் சொல்லின!
கூடவே நானும் சொன்னேன்,
"என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்."

Sunday, May 17, 2009

காதலின் பரிசு!



உன் ஈரமான இதழ்களில்
என் தாகம் தீர்த்தேனே!
உன் இடை தழுவி வந்த காற்றிலே
சுவாசம் மறந்தேனே!
உந்தன் மார்பினில் படுக்கையில்
உறக்கம் மறந்தேனே!
உன் ஸ்பரிசம் பட்ட நொடியில்
உலகையே மறந்தேனே!
தழுவிய கைகளில்
தவறாமல் சிக்கினேனே!
முதல் பரிசாய் முத்தம் தந்தாய்!
முடிவிலா இன்பம் தந்தாய்!
இத்தனைதான் இன்பமென
நான் நினைக்க - அதையும் தாண்டி
தந்தையெனும் இன்பம் தந்தாயே!
நன்றி சொல்ல நான் வந்தால்
எனக்கும் தாயுமானாயே!

Tuesday, May 05, 2009

உணர்வுகள்...

மகிழ்ச்சியை கண்கள் சிரிக்க கூறு!
பிரிவை இதயம் துடிக்க கூறு!
கோபத்தை பக்குவமாய் கூறு!
பாசத்தை அன்பு வழிய கூறு!
காதலை வெக்கம் சிவக்க கூறு!

நட்பு..

நட்பு என்பது நம்மிடம் உள்ள
அழகான உணர்வு - அது
பிறரிடம் போய் சேரும் போதுதான்
பெருமையடைகிறது...

செல்வந்தன்...

நீ என் பொழுதுகளை திருடும்
ஒவ்வொரு தடவையும்
நான் மேலும் மேலும்
செல்வந்தன் ஆகிறேன்!

துயரம்...


சில மௌனங்கள் உடைக்கப்பட வேண்டும்!
பிரிந்த உறவுகளில் ஏற்படும் மௌனங்கள்
ஓட்ட முடியாத உடைந்த உறவுக்கு
இட்டு செல்லும்....
சில மௌனங்கள் உடைக்கப்பட வேண்டும்!
என் மௌனத்தை நான் உடைக்கிறேன்.
நம் களங்கமில்லா நட்பு இன்னும் சிறிது
காலம் பிழைத்து இருப்பதற்கு..

காத்திருப்பு..


உன்னிடம் நான் பேச நினைக்கும்
வார்த்தைகள் எல்லாம் காற்றிலே
கரைந்து விடும் முன்
சீக்கிரம் வா பெண்ணே!

கவிதை

அவள் முகம் பார்த்து
என் இதழ்கள் உதிர்க்கும்
அர்ச்சனை பூக்கள் தான் இந்த கவிதைகள்..

வெளிச்சம்

உன் கைப்பிடித்து நடந்த
அந்த பத்து நிமிட பயணத்தில் மட்டுமே
வெளிச்சத்தை பாத்தேன்..

காதல்

மாற்றத்தை தந்து விட்டாய்!
தடுமாற்றத்தை தந்து விட்டாய்!
நினைவில் வந்து விட்டாய்!
என் உயிரோடு கலந்து விட்டாய்!
எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்
இத்தனை சுகங்கள் காண்பதற்கு..
உன் கரு விழியில் - என்
இரு விழி பார்வை தொலைந்ததனால்..
உன் அங்கங்களை பார்க்கும்
வாய்ப்பு இல்லை எனக்கு!
ஆனால் உன் உள்ளத்து மலர் தோட்டத்தில்
புத்தம் புதிய ரோஜாவாய் மலர்ந்தேன்!..

மாற்றங்கள்....

எத்தனை மாற்றங்கள் உன்னிடத்தில்!-இன்று
எத்தனை மாற்றங்கள் உன்னிடத்தில்...
வெள்ளை பனிக்கீற்று உன் நெற்றியில்!
முல்லை பூ வாசம் உன் கூந்தலில்!
வெள்ளை சிரிப்புகள் உன் செவ்வாயில்!
அழகாய் வரைந்த தங்க கோடுகள்
உன் சங்கு கழுத்தில்!
மாறாத தாயன்பு போல,
மாறாத மழலை சிரிப்பு போல,
உன்னுடைய மாற்றங்களும்
மாறாமல் இருக்கட்டும்...

ஒரு காதல் கடிதம்

அற்றை திங்கள் அந்நிலவில்
ஒற்றை பூவாய் நீ மலர்ந்தாய்...
எட்டு திக்கும் என் மனம் அலைந்தால்,
ஒன்பதாம் திக்கில் எனை இழுப்பாய்..
உன்னை நினைத்த நெஞ்சம் வேகுதடி..
உன்னை பார்த்த கண்கள் சாகுதடி..
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
ரசித்து ரசித்து உணர்கிறேன்...
உன்னை பார்த்தும் காதல் வந்ததோ!
காதல் வந்ததும் உன்னை பார்த்தேனோ!
இறுகிய என் மனம் பனியாய் உருகியதே!
இளகிய உன் மனம் என் காதலை உணராதோ!
சொல்லடி என் கண்மணி நான் உந்தன் உயிரென்று!

Good night

உன் கரு விழிகளால்
இருட்டுக்கு வெள்ளை அடிக்காமல்
சீக்கிரமே தூங்கு!..

என் உயிர் தோழி - 2

எனக்கு பிடித்த ஒரே தோழி நீதான்!
ஏன் என்றால் ?
என் இதயம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
உன் கண்கள் கூட
சிரிப்பு signal காட்டுகிறதே...

என் உயிர் தோழி - 1

என் உயிர் தோழி!
நான் மறந்த நிமிடங்களை
எனக்காக மீட்டு தருபவள்!
என் கலைந்த கனவுகளில்
ஒளி குறையாத நிலவு அவள்!
சுவாசிக்க மறந்த எனக்கு, உயிர் மூச்சாய்
நட்பை தந்தவள் அவள்!
நான் தூரத்து வெளிச்சம் நோக்கி நடக்க,
அவளுடைய பத்து விரல்களில்
சுண்டு விரல் மட்டும் எனக்கு போதும்...
உணர முடியாத உணர்வுகளுடன்
உன் உயிர் தோழன்.......