அது ஒரு நீண்ட கனவு!
என் கனவுகளில் என்றும்
தேவதைகள் வருவதில்லை!
சக்தி தரும் வரங்களையும்
பெற்றதில்லை!
உலகில் தேவதைகளை
உருவாக்கும் நண்பர்களே வருவார்கள்!
இதோ நேற்றைய கனவில் தோழியாய்
நீ வந்தாய்!
நிலவின் ஒளித்திரையை கிழித்து கொண்டு,
என் கண்ணின் விழித்திரையில் விழுந்தாய்!
கனவு என்று அறியா வண்ணம்,
கை கோர்த்து நடந்தாய்!
அழகியலை சப்தமாய் வாசிக்கும்
மௌன பூக்களை காண்பித்தாய்!
வெப்பம் தரும் வெயிலில்
மழையாய் பொழிந்து - வளையாத
வானவில்லாய் எனை - தலை
நிமிர வைத்தாய்!
கனவை தொலைத்து - பிதற்றிய
பொழுதுகளை மறக்க செய்தாய்!
உன் சுண்டு விரலை பிடித்து
நடக்கும் போது - கனவின்
நீளத்தை என் விருப்பமில்லாமல்
குறைய வைத்தாய்!
என் கனவுகள் தினசரி
விடியலில் கலைந்து விடாது!
ஏனெனில், உன் கண்களின்
வெளிச்சத்தில் விடியும் - என்
பகல் பொழுதுகள் - எனை
மீண்டும் மீண்டும் மீள முடியா
கனவுகளில் தள்ளுகிறது!
No comments:
Post a Comment