Friday, April 15, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இயற்கையே!
வானிற்கு மாறாத நீலம் தந்தாய்!...
நீல வானில் நட்சத்திரங்கள் பதித்தாய்!..
வாசம் நீங்கா மலர்கள் தந்தாய்!..
இசை குறையாத ஒலி தந்தாய்!.. 
அதிகாலை பனி துளி தந்தாய்!..
விழிகள் மூடும் உறக்கம் தந்தாய்!..
உறக்கம் கலையுமுன் கனவுகள் தந்தாய்!..
உன் படைப்புகள் இத்தனை தான் என்று
நான் வியந்து நிற்க..
உண்மை பேசும் இதழ்கள் செய்தாய்!..
கனவுகளை நிஜமாக்கும் கண்கள் செய்தாய்!..
மலரினும் மெலிதாய் இதயம் செய்தாய்!..
பொய்களை சுடும் வீரம் தந்தாய்!..
சித்திரை வெயிலை பனித்துளியில் நனைத்தாய்!..
உருவம் தந்தாய்!.. உயிர் செய்தாய்!..
இதோ என் முன் நிலவாய்!..
பாட்டி சொல்லும் கதைகளில் வரும் தேவதையாய்!..
தமிழ் கூறும் கவிதையாய்!.. 
என் முன்னே நிறுத்தியிருகிறாய்!..
என்ன சொல்லி நான் இவளை வரவேற்க,
"என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"
உன் கால் தடம் படும் நிலங்கள் பூக்கட்டும்!.. 
கலையாத நினைவுகளுடன்,
- மூவேந்தன்

Monday, January 03, 2011

கரைகளை தேடி...


நான் என்ற சொல்லை நாம் ஆக்கிய நட்பு!
மனதின் தீயை தீபம் ஆக்கிய நட்பு!
கண்ணீர் துளியில் பிம்பங்களாய் விழுந்த நட்பு!
மறதியை துன்பத்திற்காக என்று செய்த நட்பு!
தோழியை தோழனாக்கிய நட்பு!
தோழனை தோழியாக்கிய நட்பு!
சேர்தலில், பிரிதலில் உணரப்பட்ட நட்பு!
காதலை தொடக்கிய ஒரு நட்பு!
காதலின் பிரிவில் தொடங்கிய மற்றொரு நட்பு!
வலிக்கு மருந்திட்ட நட்பு! -பின்பு
வலிமையாய் மாறிவிட்ட நட்பு!
அழியாத நினைவுகளை சுமந்து செல்லும்,
உன் பிரியாத நட்பு!
உன் நட்பின் கரை தேட கடலில் மூழ்க சொன்னது நட்பு!
தேடி தேடி காலங்களை திருடி கொள்கிறது உன் நட்பு!
கரையில்லா கடலில் கரையாமல்
உன் அன்பில் வாழ்கிறது என் நட்பு...
என் உயிர் நட்பு!!!

Monday, January 18, 2010

சின்னஞ்சிறு கவிதைகள்!


உன் கால் தடங்களில்
என் பாதம் பற்றி நடந்த போது,
நான் செல்ல வேண்டிய தூரம் குறுகியது! 
உன் கை பற்றி நான் நடந்த போது,
குறுகிய தூரம் மறுபடியும் 
நீளாதா என்று தோன்றியது! 

உன்னுடைய ஒவ்வொரு அங்கமும் 
சுவாசிக்கின்றன!  - அதை நான் 
உன் அருகில் நெருக்கமாய் அமர்ந்திருக்கும் போது,
மெலிதான வெப்ப காற்றில் உணர்கிறேன்!

இமை மூடாமல் எனை பார்க்கும் உன் கண்கள்,
இன்று அந்த கன நொடி பொழுதில் ,
கண் சிமிட்டிய போது,
கிட்டதட்ட நான் இறந்து போயிருந்தேன்!

உன் மெல்லிய இதழ்களின் ஈரத்தில்,
என் தாகம் தணியும் எனில்,
இதழ்களை அடிக்கடி உள் வாங்கி 
ஈரப்படுத்தி கொள்!
நான் உயிர் வாழ்வதற்காக!

காதலா? கனவா?




உன்னை சந்தித்த அன்றைய பொழுதின் இரவில்,
மீள முடியா கனவில் சிக்கி கொண்டேன் போல!
இதோ இந்த நொடியில் உன்னை காணும்போதும் கூட 
கனவில் இருப்பதாய் உணர்கிறேன்!
மேகங்களின் கருங்கூந்தலால்,
மின்னல் வெளிச்ச பார்வையினால்,
மழை வருமோ என எண்ணி - ஒதுங்க இடம் தேடி 
உன் சேலை தலைப்பை தேடி அலைகிறேன்!
உன் மெல்லிய மௌன புன்னகை,
இரைச்சல் மிகுந்த இந்த மாநகரத்தில் - எனக்கு 
மட்டும் பெரிதாய் கேட்பது ஏன்? - உண்மையில் 
என் மனம் காதலில் உள்ளதா? -இல்லை 
கனவில் உள்ளதா?
என் அருகில் வந்து,என் கன்னத்தை கிள்ளி 
உணர்த்தி செல் பெண்ணே!

Friday, December 18, 2009

மறந்து போன கவிதை




மஞ்சளும் சிவப்புமாய் அந்தி வானம்....
நிலவின் உடையை மலைகளுக்கு பின்னால் 
மாற்றி கொண்டிருக்கும் சூரியன்...
பனித்துளியின் பரிசத்தில் 
பச்சையாய் பல்லிளித்து காட்டும் இலைகள்....
மனதை வருடும் மகிழம் பூக்களின் வாசனைகள்...
எனக்கான நாளைய கனவுகளை 
மெல்ல மெல்ல சுமந்து வரும் இருள்.. -- என 
இவை அனைத்தும் இருந்தும்,
அவற்றை பற்றி கவிதை எழுதாமல் 
உன் மழலை சிரிப்பையே 
ரசித்து கொண்டிருக்கிறேன்!